மதுரை சித்திரை திருவிழாவிற்காகத் தேர்தல் தேதி மாற்றப்படாது - உயர்நீதிமன்றம்! | The election dates cannot be changed because of the madurai chithirai festival

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (22/03/2019)

கடைசி தொடர்பு:21:30 (22/03/2019)

மதுரை சித்திரை திருவிழாவிற்காகத் தேர்தல் தேதி மாற்றப்படாது - உயர்நீதிமன்றம்!

சுதந்திர இந்தியாவின் பதினேழாவது மக்களவைத் தேர்தல் நெருங்க உள்ள நிலையில், தெருவோரத் தேநீர் கடை முதல், நீதிமன்றங்கள் வரை தேர்தல் பிரதான பேசுபொருளாகியிருக்கிறது. தேர்தல் குறித்து தினமும் பல்வேறு வழக்குகள் நீதிமன்ற வாசலை எட்டியிருக்கின்றன. குறிப்பாகத் தமிழகத்தில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், பல்வேறு எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.

தேர்தல் தேதி

மக்களவை தேர்தல், ஏழு கட்டங்களாக ஏப்ரல் மாதம் 11 ம் தேதி தொடங்கி, மே மாதம் 19 ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில் நாற்பது தொகுதிகளுக்கும் ஏப்ரல் மாதம் 18 ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. 

இந்நிலையில், ஏப்ரல் 18 ம் தேதி மதுரையில் பலவருடங்களாகக் கொண்டாடப்பட்டு வரும் சித்திரை திருவிழா தினமாக இருப்பதால்   தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்ற காரணத்துடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. கிறித்துவர்கள் கொண்டாடும் புனித வியாழன் அதே தினத்தில் வருவதால், கிறித்துவ வழிபாடுகளுக்கு இடைஞ்சல் நேரா வண்ணம், தேர்தல் வாக்குச்சாவடிகளை வேறு பள்ளிகளுக்கு மாற்றக் கோரியும் வழக்கு தொடரப்பட்டது. 

அனைத்து மனுக்களையும் ஒன்றாக விசாரித்த நீதிபதிகள், இன்று அந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதற்கு முன்னதாக நடைபெற்ற இருதரப்பு வாதங்களில், மதுரை சித்திரை திருவிழா நடப்பதை முன்னிட்டு, குறிப்பிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவர் என்றும் பல ஊர்களிலிருந்து மக்கள் இந்தத் திருவிழாவிற்கு வருவது வழக்கம் என்ற மனுதாரர் தரப்பு வாதத்திற்குப் பதிலளித்த தேர்தல் ஆணையத்தின் தரப்பு வழக்கறிஞர் நிரஞ்சன். மதுரை சித்திரை திருவிழாவைக் கருத்தில் கொண்டு, வாக்குப்பதிவின் நேரம் இரவு 8 மணி வரை அப்பகுதிகளில் நீட்டிக்கப்படும் என்று கூறினார்.

தேர்தல் தேதி

கிறித்துவர்கள் புனித வியாழன் அன்று தேவாலயங்களுக்குச் செல்வர் என்றும், பல தேவாலயங்கள் பள்ளி வளாகத்தினுள் இருக்கின்றன, அந்தப் பள்ளிகளில் வாக்குச் சாவடிகள் அமைத்தால் அது புனித வியாழன் அனுசரிக்கும் கிறித்துவ மதத்தினருக்கு இடைஞ்சலாக இருக்கும் என்றும் வாதிடப்பட்டதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர் நிரஞ்சன், தேர்தல் ஆணையம், அத்தகைய பள்ளி வளாகங்களில் தடுப்பு அமைத்து, வாக்களிக்க வருபவர்களுக்கும், தேவாலயங்களுக்கு வரும் கிறித்துவர்களுக்கு தனித்தனி நுழைவினை ஏற்படுத்தித் தரும் என்றும் கூறினார்.

இந்த வாதங்களைக் கருத்தில் கொண்ட நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் இவ்வழக்கை இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.