`ஓட்டுக்காகத்தான் ஸ்டாலின் பேசியுள்ளார்!' - வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளர்கள் அதிருப்தி | Veerapandy S. Arumugam supporters slams stalin

வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (22/03/2019)

கடைசி தொடர்பு:19:53 (22/03/2019)

`ஓட்டுக்காகத்தான் ஸ்டாலின் பேசியுள்ளார்!' - வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளர்கள் அதிருப்தி

``வீரபாண்டியார் மறைவுக்குப் பிறகு பல முறை தி.மு.க தலைவர் ஸ்டாலின் சேலத்திற்கு வந்து பல கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போதெல்லாம் வீரபாண்டியார் பெயர் உச்சரிப்பார் என்று எதிர்பார்த்து ஏமாந்து போவோம். ஆனால், இன்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் வீரபாண்டியாரை பற்றிப் பேசி இருப்பது. ஓட்டுக்காகப் பேசியுள்ளார் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது" என்கின்றனர் வீரபாண்டியார் ஆதரவாளர்கள்.

ஸ்டாலின்

தி.மு.க பிரசார பொதுக் கூட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு நாடும் நமதே, நாற்பதும் நமதே என்று பேசி தி.மு.க வேட்பாளர் பார்த்திபனுக்கு வாக்கு சேகரித்தார். இக்கூட்டத்தில் தி.மு.க வின் மூன்று மாவட்டச் செயலாளர்களும் கூட்டணிக் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டார்கள்.

இக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ``இக்கோட்டையை தி.மு.க கோட்டையாக உருவாக்கியவர் மறைந்த அண்ணன் வீரபாண்டியார். இப்படிப்பட்ட கோட்டையை உருவாக்கி நம்மிடம் ஒப்படைத்துச் சென்றிருக்கிறார். அவர் கடந்த 2004ல் முன்னின்று நடத்திய மாநாடு நினைவுக்கு வருகிறது. அது கலைஞரின் முப்பெரும் விழா மாநாடு. அந்த மாநாட்டில் சாரட் வண்டியில் கலைஞரை உக்கார வைத்து வண்டியை ஓட்டினார்.

இப்படிப்பட்ட வீரபாண்டியார்களை தமிழ்நாடு முழுவதும் கலைஞர் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். கலைஞரின் சின்னம் உதய சூரியன். இந்தச் சின்னத்தில் பார்த்திபன் நிற்கிறார். உதயசூரியன் சின்னத்தில் யார் போட்டியிட்டாலும் கலைஞரே நிற்பதாக நினைத்து பணியாற்றி வெற்றி பெறச் செய்ய வேண்டும்'' என்று பேசிக் கொண்டிருக்கும் போதே..

 கூட்டத்தில் இருந்த வீரபாண்டி ராஜாவின் ஆதரவாளர்கள், ``வீரபாண்டியார் மறைவுக்குப் பிறகு பல முறை தி.மு.க தலைவர் ஸ்டாலின் சேலத்திற்கு வந்து பல கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போதெல்லாம் வீரபாண்டியார் பெயர் உச்சரிப்பார் என்று எதிர்பார்த்து ஏமாந்து போவோம். ஆனால், இன்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் வீரபாண்டியாரை பற்றிப் பேசி இருப்பது. ஓட்டுக்காகப் பேசியுள்ளார் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.

வீரபாண்டியார் சேலத்திற்கு பல திட்டங்களை கொண்டு வந்தவர். தி.மு.க வின் கோட்டையாக உருவாக்கி வைத்திருந்தவர். அப்படிப்பட்ட கட்சிக்காக உழைத்து மறைந்தவர்களைத் தேர்தல் நேரத்தில் மட்டும் நினைத்துப்பார்க்காமல், எப்போதும் நினைத்துப் பார்க்க வேண்டும்'' என்றார்கள்.