`பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை' - தி.மு.க வேட்பாளர் உறுதி | Pollachi constituency dmk candidate Shanmugasundaram files nomination

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (22/03/2019)

கடைசி தொடர்பு:08:22 (23/03/2019)

`பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை' - தி.மு.க வேட்பாளர் உறுதி

'நான் வெற்றிபெற்றால், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும்' என்று பொள்ளாச்சி தி.மு.க வேட்பாளர் சண்முகசுந்தரம் கூறியுள்ளார்.

வேட்பு மனுத்தாக்கல்

பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில், தி.மு.க சார்பில் சண்முகசுந்தரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இன்று அவர் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி பிரமுகர்களுடன் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தேர்தல் அதிகாரி ரவிக்குமாரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல்செய்தார். முன்னாள் அமைச்சர்கள் கண்ணப்பன், பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோருடன் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்துக்கு சண்முகசுந்தரம் வந்திருந்தார்.

 

வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சண்முகசுந்தரம், "தேர்தலில் நான் வெற்றிபெறும் பட்சத்தில்,  விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ஆனைமலை  நல்லாறு  திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொள்ளாச்சியிலிருந்து அனைத்து பெருநகரங்களுக்கும் ரயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, வால்பாறை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு பெற்றுத் தரப்படும். தென்னை நார் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சிறப்பு காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கு புறவழிச்சாலை திட்டம் கொண்டுவரப்படும். கொப்பரை கொள்முதல் விலையை நிரந்தரமாக விவசாயிகளுக்கு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

வேட்பு மனுத்தாக்கல்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தருவதுடன், இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சிபிஐ விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.