கையில் கரும்புடன் வந்து வேட்புமனுதாக்கல் செய்த நாம் தமிழர் வேட்பாளர் சாகுல் ஹமீது! | Nam Tamilar party candidate file nomination in theni

வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (22/03/2019)

கடைசி தொடர்பு:07:44 (23/03/2019)

கையில் கரும்புடன் வந்து வேட்புமனுதாக்கல் செய்த நாம் தமிழர் வேட்பாளர் சாகுல் ஹமீது!

தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராகத் தமிழ்த் தேசியவாதியான, சாகுல் ஹமீது அறிவிக்கப்பட்டிருந்தார். இன்று(22/03/2019), மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல்செய்ய வந்திருந்தார். நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னத்தைக் குறிப்பிடும்படி, கையில் கரும்பு எடுத்துக்கொண்டு மாட்டுவண்டியில் கலெக்டர் அலுவலகம் நோக்கி கட்சியினருடன் பேரணியாக வந்து, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

வேட்புமனு தாக்கல்

அவரிடம் நாம் பேசியபோது, “நான் தமிழ்த் தேசியவாதி. தடா, பொடா சட்டத்தின் கீழ் சிறைசென்றவன். 17 மாதங்கள் சிறையில் இருந்தவன். தமிழுக்காவும், தமிழ் மண்ணுக்காகவும் இன்றுவரை குரல் கொடுத்துக்கொண்டிருப்பவன். முதன் முறையாக மக்களவைத் தேர்தலில் நிற்கிறேன். என் வாழ்வின் புதிய அனுபவம் இது. இன்றைய சூழலில் அரசியல் என்பது வியாபாரமாகிவிட்டது. அரசியல், வணிக நோக்கம் கொண்டதாக மாறிவிட்டது.

மாட்டுவண்டி

ஏழை எளிய மக்களை நசுக்கும் அரசியலாக உள்ளது. எந்தவித பொருளாதார பின்புலமும் எனக்கு இல்லை. மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறேன். எனக்கு வாய்ப்பு கொடுத்து வெற்றிபெறச் செய்தால், முல்லைப் பெரியாறு அணை பிரச்னை, நியூட்ரினோ பிரச்னை உட்பட தேனி மாவட்ட மக்களின் பிரதான பிரச்னைகளுக்காக, தமிழ் மக்களின் ஒட்டுமொத்த குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பேன்!” என்றார்.

வேட்புமனு தாக்கல்

வேட்பாளர் சாகுல் ஹமீதுடன் தேனி மாவட்ட நாம்தமிழர் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், சாகுல் ஹமீதின் வேட்புமனுவைப் பெற்றுக்கொண்டார்.