தஞ்சாவூரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப் பட்ட ரூ1.39 கோடி பறிமுதல்! | Election officers in 1.39 crises parimuthal at thanjavur

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (22/03/2019)

கடைசி தொடர்பு:23:00 (22/03/2019)

தஞ்சாவூரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப் பட்ட ரூ1.39 கோடி பறிமுதல்!

தஞ்சாவூரில் உரிய ஆவணங்களின்றி வேனில் எடுத்துச் செல்லப்பட்ட 1.39 கோடி ரூபாயைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம்

தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி சாலைப் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பாலாஜி நகரில் ஏ.டி.எம்., மையங்களுக்குப் பணம் கொண்டுசெல்லும் இரு வேன்கள் ஏ.டி.எம்., மையத்தின் முன் நின்றன. இந்த இரு வேன்களையும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். அதில், கட்டுக் கட்டாகப் பணம் இருந்தன. இந்தத் தகவலை அறிந்த மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன் தலைமையிலான போலீஸாரும் வந்து விசாரித்தனர். இதில், இரு வேன்களில் இருந்த பணத்திற்கும் வேன்களில் வந்த நபர்களுக்கும் தொடர்பில்லை என்ற சந்தேகம் பறக்கும் படையினருக்கும், போலீஸாருக்கும் ஏற்பட்டது. இதனையடுத்து இரு வேன்களையும் தஞ்சாவூர் தாசில்தார் அலுவலகத்துக்குப் பறக்கும் படையினர் கொண்டு சென்றனர்.

பின்னர் கலெக்டர் அண்ணாதுரை, ஆர்.டி.ஓ.,சுரேஷ் உள்ளிட்டோர் தாசில்தார் அலுவலகத்துக்குச் சென்று விசாரித்தனர். இதில் ஒரு வாகனத்தில் 10.59 லட்ச ரூபாய் இருந்தது. இந்தத் தொகைகள் தஞ்சையில் உள்ள வணிக நிறுவனங்களிலிருந்து, வங்கியில் டெபாசிட் செய்வதற்கும் மற்றொரு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 1.29 கோடி ரூபாய் பணம் தஞ்சையில் உள்ள வங்கிகளிலிருந்து பெறப்பட்டு, ஏ.டி.எம் மையங்களில் நிரம்பவும் கொண்டு வரப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அதற்கான முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை.

பணம் எடுத்துச் செல்லப்பட்ட வேன்

இது குறித்து கலெக்டர் அண்ணாதுரை கூறுகையில், ``பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக உரிய விசாரணைக்குப் பிறகு முடிவு செய்யப்படும். இதுபோன்ற நிகழ்வுகளை விசாரிப்பதற்காக மாவட்ட அளவில் திட்ட அலுவலர் தலைமையில் நேர்முக உதவியாளர் (கணக்கு) உள்ளிட்ட அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினரிடம் வங்கியாளர்கள் தங்களுடைய ஆவணங்களை அளித்த பிறகு அதைக் குழுவினர் ஆய்வு செய்வர். மேலும், 10 லட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகையாக இருப்பதால், வருமான வரித் துறை அலுவலர்களும் வரவழைக்கப்பட்டனர். எனவே, வருமான வரித் துறை அலுவலர்களிடமும் கருத்தை பெற்ற பிறகு பணத்தை ஒப்படைப்பது பற்றிக் குழுவினர் முடிவு செய்வர். அதுவரை இந்தப் பணம் சார்நிலைக் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும்’’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க