வாகனத்தில் கூட்டணிக் கட்சிகளின் கொடி! - விகடன் செய்திக்குப் பிறகு ஓ.பி.எஸ் மகன் நடவடிக்கை | Theni admk candidate installs alliance party flags in his van

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (22/03/2019)

கடைசி தொடர்பு:21:40 (22/03/2019)

வாகனத்தில் கூட்டணிக் கட்சிகளின் கொடி! - விகடன் செய்திக்குப் பிறகு ஓ.பி.எஸ் மகன் நடவடிக்கை

பொதுவாகத் தேனி மாவட்டத்தில் யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும், தேனி மாவட்ட எல்லையான ஜி.கல்லுப்பட்டியில் அமைந்துள்ள பட்டாளம்மன் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு பிரசாரத்தைத் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், நேற்று முன்தினம் பட்டாளம்மன் கோயிலிலிருந்து பிரசாரத்தைத் தொடங்கினார் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார்.

ரவீந்திரநாத் குமாரின் பிரசார வாகனம்

பா.ஜ.க., தே.மு.தி.க., பா.ம.க., புதிய தமிழகம் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் அனைவரும் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்குமாரை வரவேற்று, பட்டாளம்மன் கோயிலுக்கு அழைத்துச் சென்று சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்து, சாமி கும்பிட்டுவிட்டு பிரசாரத்தைத் தொடங்கினர். கோயில் வாசலிலிருந்து தொடங்கப்பட்ட பிரசாரமானது ஜி.கல்லுப்பட்டி, கெங்குவார்பட்டி, தேவதானப்பட்டி வழியாக பெரியகுளம் வரை சென்றது. அப்போது ரவீந்திரநாத்குமார் வண்டியில் ஏறி, மக்களிடம் வாக்குக் கேட்க பயன்படுத்தப்பட்ட பிரசார வாகனத்தில் அ.தி.மு.க கொடி மட்டுமே வைக்கப்பட்டிருந்தது.

பிரசார வாகனத்தில் ரவீந்திரநாத் குமார்

மற்ற கூட்டணிக்கட்சிகளின் கொடிகள் புறக்கணிக்கப்பட்டன. இதைக் குறிப்பிட்டு விகடன் செய்தி வெளியிட்டிருந்தது. பிரசாரத்தின் முதல் நாளே கூட்டணிக் கட்சிகளை ரவீந்திரநாத்குமார் புறக்கணிக்கிறாரா எனக் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதைப் படித்த ரவீந்திரநாத்குமார், இன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த போது, தனது காரின் முன் பக்கத்தில் கூட்டணிக் கட்சிகளின் கொடிகளை வைத்திருந்தார். இது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.