தஞ்சையில் ஒரே நாளில் வேட்புமனுத் தாக்கல் செய்த அ.தி.மு.க - தி.மு.க வேட்பாளர்கள்! | Tanjore DMK and ADMK candidates files nomination today

வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (22/03/2019)

கடைசி தொடர்பு:23:30 (22/03/2019)

தஞ்சையில் ஒரே நாளில் வேட்புமனுத் தாக்கல் செய்த அ.தி.மு.க - தி.மு.க வேட்பாளர்கள்!

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர், ஜோதிடர் ஆலோசனையின் பேரில் இன்று தீடீரென நெற்றியில் குங்குமம் வைத்துக்கொண்டு பயபக்தியுடன் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

அ.தி.மு.கவினர் வேட்புமனுத் தாக்கல்

40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 18ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 19ம் தேதி தொடங்கியது. ஆனால், தஞ்சாவூரில் வேட்பு மனுத் தாக்கல் மந்தமாகவே இருந்தன. ஒரு சில சுயேச்சை வேட்பாளர்கள் மட்டும் மனுத் தாக்கல் செய்தனர். இதற்கு நாள் சரியில்லாததே காரணம் எனச் சொல்லப்பட்டன. இதனையடுத்து இன்று முகூர்த்த நாள் எனவே இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக  இருக்கும் எனக் கூறி அ.தி.மு.க வேட்பாளர்கள் இன்று  தமிழகம் முழுவதும் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். இந்நிலையில் தஞ்சை சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் காந்தி வேட்பு மனுத் தாக்கல் செய்தார். முன்னதாக எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ.,சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் தனது கூட்டணிக் கட்சி தொண்டர்கள் படை சூழ வந்து மதியம் 1 மணிக்கு ஆர்.டி.ஓ.,சுரேஷிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர். 

தி.மு.கவினர் வேட்புமனுத் தாக்கல்

இந்நிலையில் தி.மு.க.,வேட்பாளர்கள் வரும் 25ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்வதாக பேச்சுக்கள் அடிப்பட்டன. ஆனால், தஞ்சை சட்ட மன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டி.கே.ஜி. நீலமேகம், முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான பழநிமாணிக்கம் மற்றும் தெற்கு மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன் ஆகியோருடன் திடீரென வந்து மதியம் 2.30 மணிக்கு தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

இதில் கூட்டணிக் கட்சியான ம.தி.மு.க.,வை தவிர, வேறு எந்தக் கட்சியினரும் வரவில்லை. வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த நீலமேகம் நெற்றியில் குங்குமம் வைத்துக்கொண்டு பக்தி மயத்துடன் காணப்பட்டார்.  ஜோதிடர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தால், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என ஆலோசனை வழங்கியதால் வேட்புமனுவை தாக்கல் செய்தாகப் பேசிக் கொண்டனர். தலைமை அறிவித்தப்படி 25ம் தேதி மீண்டும் வேட்புமனுத் தாக்கல் செய்யப்படும் என்றும் தி.மு.கவினர் தெரிவித்தனர். நீலமேகம் தரப்போ, `ஒரு வேட்பாளர் 4 முறை வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என்பதால் முதல் முறை செய்து விட்டு, பிறகு மீண்டும் தலைமை சொல்கிறபடி வேட்புமனுத் தாக்கல் செய்யப்படும்' எனத் தெரிவித்தார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க