திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டி - வேட்பாளர்களை அறிவித்த அகில இந்திய காங்கிரஸ்! | Congress candidate list for tamilnadu

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (23/03/2019)

கடைசி தொடர்பு:07:00 (23/03/2019)

திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டி - வேட்பாளர்களை அறிவித்த அகில இந்திய காங்கிரஸ்!

க்களவைத் தேர்தல் தேதி நெருங்க உள்ள நிலையில் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்து விட்டனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய சொந்த தொகுதியான சேலத்தில் இருந்தும், தி.மு.கவின் தலைவர் ஸ்டாலின் திருவாரூரில் இருந்தும் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்த்து  மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 10 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. .

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்

தமிழகத்தில் பெருவாரியான அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, வேட்பு மனுவையும் தாக்கல் செய்யத்  தொடங்கிய நிலையில் தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவிப்பதில் காலம் தாழ்த்தியது கூட்டணிக்குள் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த 35 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது காங்கிரஸ் தலைமை. அவற்றில் தமிழகத்தில்  தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகளில் சிவகங்கை தவிர்த்து மீதமுள்ள  8 தொகுதிகளுக்கும் மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்குமான  வேட்பாளர்களை அறிவித்துள்ளது.


ராகுல் காந்தி, சோனியா காந்தி

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில்,  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசு திருச்சி தொகுதியிலும், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தேனி தொகுதியிலும், ஜெயக்குமார் திருவள்ளூர் தொகுதியிலும், விஷ்ணு பிரசாத் ஆரணி தொகுதியிலும், செல்வகுமார் கிருஷ்ணகிரி தொகுதியிலும், மாணிக்கம் தாகூர் விருதுநகர் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர்.

தி.மு.க கூட்டணி

மேலும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதகிருஷ்ணனுக்கு எதிராகக் கன்னியாகுமரி தொகுதியில் வசந்த குமாரும், மக்களவைச் சபாநாயகர் தம்பி துரைக்கு எதிராகக் கரூர் தொகுதியில் ஜோதிமணியும் போட்டியிட உள்ளனர். அதேபோல் புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளராக வைத்தியலிங்கம் போட்டியிட உள்ளார். சிவகங்கைத் தொகுதிக்கான வேட்பாளர் மட்டும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.