காேத்தகிரியில் பாெதுமக்களை அச்சுறுத்திய கரடிகள் - கூண்டு வைத்து பிடித்த வனத்துறை | forest department caught bear

வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (23/03/2019)

கடைசி தொடர்பு:08:30 (23/03/2019)

காேத்தகிரியில் பாெதுமக்களை அச்சுறுத்திய கரடிகள் - கூண்டு வைத்து பிடித்த வனத்துறை

நீலகிரி மாவட்ட வனப்பகுதிகள் தற்போது கடும் வறட்சியைச் சந்தித்து வருகிறது. பல இடங்களில் உணவு தண்ணீர்த் தேடி வன விலங்குகள் ஊருக்குள் நுழைவது வாடிக்கையாகிவிட்டது.  இந்நிலையில் கோத்தகிரி அருகே  கோடநாடு காட்சி முனைக்குச் செல்லும் சாலையில் எஸ். கைகாட்டி பகுதியில் கக்குளா கிராம மக்களின்  மாரியம்மன் கோயில் உள்ளது. இப்பகுதியில் உள்ள எஸ்.கைகாட்டி, சன்ஷைன் நகர், கஸ்தூரிபா நகர், கக்குளா உள்ளிட்ட கிராம மக்கள் இந்த கோயிலில் வழிபடுவது வழக்கம்.  

வனத்துறை


இந்நிலையில்  கடந்த இரு வாரங்களாக  நள்ளிரவில் எஸ்.கைகாட்டி மாரியம்மன் கோயிலின் கதவை உடைத்து உள்ளே செல்லும் 3 கரடிகள் அங்கு  வைக்கப்பட்டிருந்த விளக்குகளில் இருந்த எண்ணெய்யை குடித்துவிட்டு கோயிலுக்குள் வைக்கப்பட்டிருந்த பொருள்களையும் சிதறடித்துச்  சேதப்படுத்தி சென்று விடுகின்றன. கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் தொடர்ந்து கரடிகள் நடமாடி வருவதால் பணிக்கு சென்று விட்டு, மாலை -  இரவு நேரங்களில் வீடு திரும்பும் தொழிலாளர்களும், வாகனங்களில் செல்வோரும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.  இரவு வேளைகளில் உலா வரும் கரடிகள் தாக்கி பொதுமக்களுக்கு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன் கரடிகளை கூண்டு வைத்துப் பிடிக்க  வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறைக்குக்  கோரிக்கை  விடுத்தனர். 

பொதுமக்களின்   கோரிக்கையை ஏற்று கோத்தகிரி வனத்துறையினர் கோயிலின் நுழைவு வாயிலின் முன்பு  கூண்டுகள் வைத்து அப்பகுதியில முகாமிட்டு கரடிகளை கண்காணித்து வந்தனர். நேற்றிரவு அவ்வழியாக வந்த 3 கரடிகளில் ஒரு கரடி மட்டும் கூண்டில் சிக்கியது . மேலும் கரடிகள் கடும்சப்தம் எழுப்பியது உடனே வனத்துறையினர் வந்து கூண்டின் அருகே இருந்த இரண்டு கரடிகளையும் விரட்டி விட்டு கூண்டில் சிக்கிய கரடியை வன அலுவகத்திற்கு காெண்டு சென்றனர்.  பிடிபட்ட  7 வயதுள்ள பெண் கரடி, பாதுகாப்புடன்  அவலாஞ்சி வனப்பகுதியில் விட்டனர். அப்பகுதியில் சுற்றித்திரியும்  இரண்டு கரடிகளை பிடிக்க வனத்துறையினர் மீண்டும் கூண்டு வைக்க முடிவு செய்துள்ளனர்.