``எட்டு ஆண்டுகளாக திண்டுக்கல்லைப் புறக்கணித்த அ.தி.மு.க அரசு!” - ஐ.பெரியசாமி கண்டனம் | The AIADMK government did not initiate medical college in Dindigul

வெளியிடப்பட்ட நேரம்: 08:50 (23/03/2019)

கடைசி தொடர்பு:09:08 (23/03/2019)

``எட்டு ஆண்டுகளாக திண்டுக்கல்லைப் புறக்கணித்த அ.தி.மு.க அரசு!” - ஐ.பெரியசாமி கண்டனம்

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கான மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர் வேட்புமனு தாக்கல் நேற்று(22-03-2019) நடைபெற்றது. தி.மு.க வேட்பாளர் வேலுச்சாமி வேட்புமனுத் தாக்கல் செய்தார். தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி தலைமையில், மாவட்ட செயலாளர்கள் சக்கரபாணி, செந்தில்குமார் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர். வேட்புமனு தாக்கலுக்கு பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய ஐ.பெரியசாமி, ``காங்கிரஸ், தி.மு.க ஆட்சிக் காலத்தில் 350 ரூபாயாக இருந்த சிலிண்டர் இன்றைக்கு ஆயிரம் ரூபாயைத் தாண்டிவிட்டது. உலக சந்தையில் பெட்ரோல் டீசல் விலை மிகக் குறைவாக இருக்கிறது. ஆனால் மோடியின் அரசு பல நூறு மடங்கு வரி போட்டு விலை அதிகமாக்கி இருக்கிறார்கள். தஞ்சையைப் பாலைவனமாக்கும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டிருக்கிறது. ஆக மக்கள் விரோத மத்திய ஆட்சி அகற்றப்பட வேண்டும். இன்றைக்குத் தண்ணீர் கூடப் பணம் கொடுத்து வாங்கிக் குடிக்க வேண்டி நிலையில் தமிழகம் இருக்கிறது. இந்த அரசு மக்கள் விரோத அரசு.

பெரியசாமி 

2010-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரிக்கான அனுமதியும், அதற்கான அரசாணை போடப்பட்டு தனி அதிகாரி நியமிக்கப்பட்டார். பணிகள் துவங்கியது. ஆனால் அடுத்து வந்த அ.தி.மு.க ஆட்சியால் அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம் இன்றைக்குத் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. காரணம் திண்டுக்கல் மாவட்டத்தில் நான்கு தொகுதிகளில் திமுக எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். இதை மனதில் வைத்துத் தனிப்பட்ட முறையில் வஞ்சம் தீர்க்கும் வகையில் மக்களைப் பழிவாங்குகிறார்கள். அதனால் மருத்துவக் கல்லூரி இன்னும் வரவில்லை. அதற்குப் பின்பு அறிவித்த மருத்துவக் கல்லூரி எல்லாம் வந்து விட்டது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட திண்டுக்கல் மாவட்டம் இன்னும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மீண்டும் தமிழகத்தில் தி.மு.க ஆட்சி வந்த பிறகுதான் திண்டுக்கல்லில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும். தேர்தல் அறிக்கையில் அறிவித்திருக்கும் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும். மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி திட்டங்களை எதிர்காலத்தில் கொண்டு வருவோம். திண்டுக்கல் தொகுதியில் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவார். இந்தியாவில் அடுத்து காங்கிரஸ் தலைமையிலான அரசும், தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான அரசும் அமைய இருக்கிறது'' என்றார்.

அ.தி.மு.க சார்பாகப் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஜோதி முத்து நேற்று மனுத்தாக்கல் செய்தார். அதிமுக அமைச்சர் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் யாரும் உடன் வரவில்லை. நாம் தமிழர் கட்சி சார்பாக நடிகர் மன்சூர் அலிகானும் நேற்றைய தினம் மனுத்தாக்கல் செய்தார். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க