``பதவிக்காக நீங்கள் செய்ததைப் பட்டியலிடவா?”- ஸ்டாலினை விமர்சித்த அமைச்சர் கருப்பணன் | ``can i list out your crime list!" - minister karuppannan attacks dmk leader mk stalin

வெளியிடப்பட்ட நேரம்: 10:28 (23/03/2019)

கடைசி தொடர்பு:11:55 (23/03/2019)

``பதவிக்காக நீங்கள் செய்ததைப் பட்டியலிடவா?”- ஸ்டாலினை விமர்சித்த அமைச்சர் கருப்பணன்

ஈரோட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக, அ.தி.மு.க தேர்தல் பணிமனை திறப்புவிழா நேற்று (மார்ச் 22) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன் மற்றும் கருப்பணன் ஆகியோர் கலந்துகொண்டு, பணிமனையைத் திறந்து வைத்தனர்.

கருப்பணன்

நிகழ்ச்சியின் போது அமைச்சர் கருப்பணன் பேசுகையில், ``அம்மா இருந்தபோது அமைத்த கூட்டணியை விட சிறப்பான கூட்டணியை நாம் இப்போது அமைத்திருக்கிறோம். தங்கமணி, வேலுமணி ஆகிய ரெண்டு மணியும்(!) சிறப்பான கூட்டணி அமையப் பாடுபட்டிருக்கின்றனர். சகல கட்சியைச் சேர்ந்தவர்களும் நமக்கு ஓட்டுப் போடுகின்ற அளவுக்குப் பல சிறப்பான திட்டங்களை இன்றைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடுத்திருக்கிறார். இன்னைக்கு உலகத்துலயே அஞ்சு நிமிஷத்துல பார்க்கக் கூடிய ஒரு முதலமைச்சர் அண்ணன் எடப்பாடி பழனிசாமிதான். ஒரு துண்டு சீட்டை உள்ள குடுத்து அனுப்புனீங்கன்னா, அடுத்த நிமிஷமே உங்களை உள்ள கூப்பிட்டு என்ன குறைன்னு கேட்டு அனுப்புவார். சந்தேகம் இருந்தா நீங்க ஒரு துண்டு சீட்டைக் கொடுத்துப் பாருங்க. தமிழ்நாட்டுல உள்ள நாலரை கோடி பேர்ல இதுவரைக்கும் ஒரு கோடி பேர் போய் அண்ணன் எடப்பாடியைப் பாத்திருப்பாங்க” எனக் கலகலப்பூட்டினார்.

ஸ்டாலின்

தொடர்ந்து பேசியவர், ``கொடாநாடு எஸ்டேட்ல வேலை செஞ்ச ஆட்களை கொலை பண்ணிட்டு, ஜெயலலிதா ரூம் சாவியை எடப்பாடி எடுத்துட்டு வந்துட்டார்ன்னு ஸ்டாலின் பேசுனதை நான் டி.வியில பார்த்தேன். மூளையில்லாமப் பேசுறீயே ஸ்டாலினு!... எடப்பாடி எதுக்காக கொடாநாடு போய் கொலை பண்ணிட்டு, சாவியை எடுத்துட்டு வரணும். நாங்க கேட்டா சென்னைக்கே சாவியைக் கொண்டு வந்து கொடுக்கப் போறாங்க. என்ன வேணுமோ அதை எடப்பாடி போய் எடுத்துக்கப் போறார். அப்படியிருக்க எடப்பாடி கொலை செஞ்சாருன்னு சொன்னா என்ன அர்த்தம். உலகத்திலேயே மோசமான ஊழல் நாடு என இந்தியாவிற்கு 2 -ஜி மூலமாகப் பேர் வாங்கிக் கொடுத்தது உங்கள் ஆட்சி தானே!... நாங்கள் கொலைகார ஆட்சி நடத்துகிறோமா? யார் கொலைக்கார ஆட்சி நடத்தியது என்பதை மக்கள் அறிவார்கள். பதவிக்காக நீங்கள் செய்த கொலைகளின் பட்டியலை நான் சொல்லவா?” என ஸ்டாலினை வெளுத்து வாங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய மற்ற அமைச்சர்கள் யாரையும் விமர்சித்துப் பேசாத நிலையில், அமைச்சர் கருப்பணன் மட்டும் ஸ்டாலினையும்  தி.மு.கவையும் கடுமையாக தாக்கிப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.