`உங்களுக்கு அந்தப் பதவி காத்திருக்கு!' - பிரசாரத்தில் அன்புமணியை குஷிப்படுத்திய எடப்பாடி | Edappadi palanisamy election campaign for Anbumani

வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (23/03/2019)

கடைசி தொடர்பு:12:25 (23/03/2019)

`உங்களுக்கு அந்தப் பதவி காத்திருக்கு!' - பிரசாரத்தில் அன்புமணியை குஷிப்படுத்திய எடப்பாடி

``அன்புமணி போட்டியிடுகின்ற தர்மபுரி தொகுதி இந்தியாவிலேயே அதிக வெற்றி பெற்ற தொகுதியாக இருக்க வேண்டும்" என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் மேற்கொண்டார்.

அன்புமணிக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி பா.ம.க வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து முதல்வர் பழனிசாமி நல்லம்பள்ளியில் திறந்த வேனில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அருகில் அன்புமணி உடன் இருந்தார். அப்போது பிரசாரம் செய்த முதல்வர் பழனிசாமி, ``இப்போது நடைபெறுவது மத்தியிலே நிலையான வலிமையான ஆட்சி அமைய வேண்டும் என்கிற தேர்தல். நமது இந்தியா 130 கோடி மக்கள் கொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாடு. இந்த ஜனநாயக நாட்டிலே ஒரு வலிமைமிக்க, திறமைமிக்க, வீரமிக்க பிறந்தவர் இந்த நாட்டிற்கு வர வேண்டும். கடந்த காலத்தை நினைத்துப்பாருங்கள். தி.மு.க மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தார்கள். அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது தமிழகத்துக்கு ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. 

தமிழகத்துக்குப் புதிய திட்டங்களை கொண்டு வந்தார்களா, புதிய தொழிற்சாலைகளை கொண்டு வந்தார்களா, தேவையான நிதியைப் பெற்றுத் தந்தார்களா, அவர்கள் எதுவுமே செய்யவில்லை. அவர்கள் அனுபவித்து எல்லாம் பதவி சுகம். நீங்கள் ஓட்டுப்போட்டு அவர்களை தேர்ந்தெடுத்ததுக்கு அவர்களின் குடும்பம்தான் பலம்வாய்ந்திருக்கிறது. தி.மு.கவுக்கு மிகப் பெரிய வாய்ப்பு கொடுத்தீர்கள். அவர்கள் நாட்டு மக்களை கவனிக்கவில்லை. அவுங்க வீட்டு மக்களைத்தான் கவனித்தார்கள்.

எடப்பாடி பிரசாரம்

தற்போது போட்டியிடுகிற எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் தமிழகத்துக்கு நல்ல திட்டங்கள் கிடைக்கும். நிதிகள் கிடைக்கும். அதன்மூலம் தமிழகம் வளர்ச்சியடையும். இத்தனையும் வரவேண்டும் என்றால் அன்புமணிக்கு வாக்களிக்க வேண்டும். சில துரோகிகள் அ.தி.மு.க ஆட்சியைக் கவிழ்க்க திட்டம் செய்தார்கள். அந்த துரோகிகளின் பேச்சைக்கேட்டு 18 சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களிடத்திலிருந்து விலகிச் சென்றார்கள். இதனால் இந்த இடைத்தேர்தலைச் சந்திக்கிறோம். இந்தத் தேர்தல் மூலமாக நயவஞ்சகவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். சதிகாரர்கள் போட்டியிடுகின்ற இந்தத் தேர்தலிலிருந்து ஓடஓட விரட்டியடிக்கப்பட வேண்டும்.

அன்புமணியுடன் எடப்பாடி

அன்புமணி ஏற்கெனவே மத்திய அமைச்சராக இருந்தவர். இந்த முறையும் வருவதற்கு பிரகாசமான வாய்ப்பு காத்திருக்கிறது. (முதல்வர் இப்படிப் பேசியபோது அருகில் நின்ற அன்புமணி சிரித்தார்) அப்படி அவர் வருகிறபோது தர்மபுரி மாவட்டம் செழிக்கும். தி.மு.க தலைவர் ஸ்டாலின் சேலத்தில் பேசும்போது, நான் சாமியாம் ராமதாஸ் மணி அடிக்கிறாராம். இதுபோன்று கிண்டலாகப் பேசுகிறார். ராமதாஸின் சேவை பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா. மிகவும் கொச்சைப்படுத்தி பேசுகிறார். அந்த அகங்காரம் திமிறை அடக்க வருகிற தேர்தலில் அவர்களின் கூட்டணி வேட்பாளர்களை தோற்கடிக்க வேண்டும். அன்புமணி போட்டியிடுகின்ற தர்மபுரி தொகுதி இந்தியாவிலேயே அதிகம் வெற்றி பெற்ற தொகுதியாக இருக்க வேண்டும். இந்தப் பகுதி வறண்ட பகுதியாக இருக்கிறது. இந்தப் பகுதி வளமான பகுதியாக அன்புமணிக்கு வாக்களிக்க வேண்டும். கோதாவரி- காவிரி இணைப்பு நிச்சயமாக உருவாக்கப்படும்" என்று பேசினார்.