`வாக்குறுதி வேண்டாம், எழுதி கையெழுத்துப்போடணும்!'- வேட்பாளர்களை கலங்கடிக்கும் 34 கிராம மக்கள் | 34 villagers in demand written statement from the political parties

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (23/03/2019)

கடைசி தொடர்பு:13:00 (23/03/2019)

`வாக்குறுதி வேண்டாம், எழுதி கையெழுத்துப்போடணும்!'- வேட்பாளர்களை கலங்கடிக்கும் 34 கிராம மக்கள்

கடவூர்

வழக்கமாக தேர்தல் காலங்களில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும்தாம், `எனக்கு ஓட்டுப் போட்டால், இதைச் செய்வேன்; அதைச் செய்வேன்' என்று வாக்குறுதி கொடுப்பார்கள். தேர்தல் முடிந்தபிறகு, தாங்கள் கொடுத்த கோரிக்கையைக் காற்றில் பறக்கவிட்டுவிடுவார்கள். இந்நிலையில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 34 கிராம மக்கள், `வர்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வாக்குறுதி கொடுப்பர்களுக்கு எங்கள் ஓட்டு' என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார்கள்.

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் வரும் கடவூர் ஊராட்சி உள்ளிட்ட 34 கிராமங்கள்தான் இப்படி அதிரடி கோரிக்கை வைத்திருப்பவர்கள். கடவூர் மற்றும் 34 கிராமங்களைச் சுற்றி மலை அமைந்திருக்கிறது. இந்த 34 கிராமங்களுக்கும் வெளியில் வந்து போக மூன்று வழிகளே உள்ளன. அதனால், இந்த கிராமங்கள் அனைத்திலும் அடிப்படை வசதிகளே செய்யப்படாமல் இருப்பதாக மக்கள் குமுறுகிறார்கள். அதனால்தான், வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி இப்படி அதிரடி அறிவிப்பு செய்திருக்கிறார்கள்.

கடவூரைச் சுற்றி இருக்கும் மலை கிராமங்கள்

இதுபற்றி, நம்மிடம் பேசிய அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞரான பாலசுப்ரமணி, ``வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு வேண்டி வரும் வேட்பாளர்களுக்கு கடவூர் உள் மாகாணப் பகுதி மக்களின் கோரிக்கைகள். கடவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி, அதை 24 மணிநேர மருத்துவர் மற்றும் அவசரகால ஊர்தி வசதிகள் உள்ளதாக மாற்ற வேண்டும். கடவூர் முதல் திண்டுக்கல் வரை கூடுதல் பேருந்து வசதி செய்ய வேண்டும். அதேபோல், தங்குதடையின்றி அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீருக்கு மாற்று வசதி ஏற்படுத்தி தரவேண்டும். வங்கிகளில் வங்கிப் பணியாளர்களின் பணிச்சுமையையும், மக்களின் காலவிரயத்தையும் தவிர்க்க, இடையப்பட்டியில் புதியதாக ஓர் அரசு வங்கி தொடங்கப்படவேண்டும். கடவூரில் 1000 க்கும் மேற்பட்ட கிராமப்புற கல்லூரி மாணவர்கள் உள்ளனர். இவர்களுக்காக கடவூரில் நூலகம் ஒன்று உள்ளது. இவற்றை இணையவசதியுடன் தரம் உயர்த்த வேண்டும்.

பாலசுப்ரமணிகடவூர்ப் பகுதியில் படித்த வேலையற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அரசுப் போட்டி தேர்வுக்கான பயிற்சி மையம் அமைக்க வேண்டும். கடவூர் வட்டத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும். கடவூர்ப் பகுதியில் 100 நாள் வேலைவாய்ப்பில் தொடர்ந்து அத்துமீறி நடைபெறும் கொள்ளையைத் தடுக்கவேண்டும். கடவூர்ப் பகுதியை சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும். படிக்காத ஏழை பெண்மணிகள், இல்லத்தரசிகளுக்கு இலவச தொழிற்பயிற்சி மையம் அமைக்கப்பட வேண்டும். இவற்றை நிறைவேற்ற வாக்குறுதி கொடுக்கும் வேட்பாளர்கள், அதை வெறும் வாக்குறுதிகளாக தராமல் எழுதி கையெழுத்திட்டு தர வேண்டும். அவர்களுக்கே எங்கள் 34 கிராம மக்களின் ஓட்டு விழும். இந்தியா குடியரசு ஆன பிறகு கடவூர் பெயரில் சட்டமன்றத் தொகுதி, ஒன்றியம், வட்டம், தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய கிராம ஊராட்சி என அரசு அலுவலகங்களில் மட்டுமே கடவூர் பெயர் பெயரளவுக்கு உள்ளது. மற்றபடி, எந்தவொரு அடிப்படை வசதியும் இங்கே இல்லை. கடவூர் தனது பெயருக்கேற்றது போல் எந்த அடிப்படை வசதிகளும் அற்ற கடைசிநிலைப் பகுதியாகவே இன்றும் உள்ளது. அந்த நிலையை மாற்றி, மலைவாழ் கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைச் செய்ய நினைக்காத யாருக்கும் நாங்கள் வாக்களிக்கமாட்டோம்!" என்றார் அதிரடியாக.