`அம்மாவை உள்ளே விடுங்க!' - நேரம் காலம் பார்த்து அடம் பிடித்த அமைச்சரின் மகன்  | ADMK candidate says to permit his mom while nomination

வெளியிடப்பட்ட நேரம்: 14:48 (23/03/2019)

கடைசி தொடர்பு:15:21 (23/03/2019)

`அம்மாவை உள்ளே விடுங்க!' - நேரம் காலம் பார்த்து அடம் பிடித்த அமைச்சரின் மகன் 

வேட்பு மனுத்தாக்கல் செய்த அமைச்சர் மகன் ஜெயவர்தன்

தென்சென்னையில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய அமைச்சர் ஜெயக்குமாரின் மகனும் சிட்டிங் எம்.பியுமான ஜெயவர்தன் வந்தார். அப்போது அமைச்சர் ஜெயக்குமாரின் மனைவியை உள்ளே செல்லவிடாமல் தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

நாடாளுமன்றத் தேர்தலில் தென்சென்னையில் அ.தி.மு.க. சார்பில் சிட்டிங் எம்.பியும், அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் தமிழச்சி தங்கப்பாண்டியனும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா ஆகியோர் போட்டியிடுகின்றனர். வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய ஜெயவர்தன் சென்னை அடையாறில் உள்ள மாநகராட்சி தெற்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்துக்கு நேற்று கூட்டணிக் கட்சியினருடன் ஊர்வலமாக வந்தார். கூட்டணிக் கட்சியான பா.ஜ.க., தே.மு.தி.க. மற்றும் பா.ம.க. ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் வேட்பு மனுத் தாக்கலின் போது வந்தனர். ஊர்வலத்தின் முன்னால் சென்ற பா.ஜ.க.வினர் மீண்டும் மீண்டும் மோடி ஆட்சி வேண்டும் வேண்டும் என கோஷமிட்டனர். ஜெயலலிதா உயிரோடு இருந்தால் இப்படி நடக்குமா என அ.தி.மு.க.வினர் புலம்பினர். 

வேட்பு மனுத்தாக்கல் செய்த அமைச்சர் மகன் ஜெயவர்தன்

தேர்தல் விதிமுறைப்படி வேட்பாளருடன் நட்ராஜ் எம்.எல்.ஏ. மாவட்டச் செயலாளர்கள் வி.என்.ரவி, முன்னாள் எம்.பி, சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் மனுத்தாக்கல் அறைக்குள் சென்றனர். வடசென்னையில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் மோகன்ராஜ் நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அங்கு அமைச்சர் ஜெயக்குமார் சென்றுவிட்டார். இதனால் மகன் ஜெயவர்தன் வேட்பு மனுத்தாக்கலின்போது அவருடைய அம்மா ஜெயக்குமாரி கலந்துகொள்ள முடிவு செய்தார். நல்ல நேரத்துக்குள் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வேண்டியதால் ஜெயவர்தன் உள்ளே சென்றுவிட்டார். சிறிது நேரம் தாமதமாக வந்த அமைச்சரின் மனைவி ஜெயக்குமாரியை போலீஸார் உள்ளே அனுமதிக்கவில்லை. அமைச்சரின் மனைவி, வேட்பாளரின் அம்மா என்று அவர் கூறியபோதும் அதை அங்குள்ள போலீஸார் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து அங்கிருந்த கட்சி நிர்வாகிகள், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்தத் தகவல் ஜெயவர்தனுக்கு தெரியவந்ததும் அவர், ஜெயக்குமாரியை உள்ளே அழைத்துச் சென்றார்.  இதையடுத்து அம்மாவின் ஆசியோடு ஜெயவர்தன் தேர்தல் அதிகாரி ஆல்பி ஜான்வர்க்கீஸிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். 

வேட்பு மனுத்தாக்கல் செய்த அமைச்சர் மகன் ஜெயவர்தன்   

அதன்பிறகு ஜெயவர்தன் கூறுகையில், ``அ.தி.மு.க.வில் தலைவன் முதல் தொண்டன் வரை மக்களுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதைச் செய்துவருகின்றனர். இனியும் அதைச் செய்வோம். தென்சென்னைப் பகுதியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், 1,200 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் நிச்சயம் நான் வெற்றி பெறுவேன். 100 சதவிகிதம் வெற்றி உறுதி" என்றார். 

ஜெயவர்தன் வேட்பு மனுத் தாக்கலின்போது கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் யாரும் இல்லை. இதனால் கூட்டணிக் கட்சியினர் அதிருப்தியடைந்தனர்.