`கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள், கிலோ கணக்கில் தங்கம்!'- சென்னையில் ஒரே நாளில் அதிரடி | Election flying squad caught money in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (23/03/2019)

கடைசி தொடர்பு:15:05 (23/03/2019)

`கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள், கிலோ கணக்கில் தங்கம்!'- சென்னையில் ஒரே நாளில் அதிரடி

 பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், பணம்

 சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம், கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி ஆகியவை சிக்கின. பணம் மற்றும் தங்கம், வெள்ளி ஆகியவை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். வாகன சோதனையில் இரவு, பகல் என அதிகாரிகளுடன் இணைந்து போலீஸாரும் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்தச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருள்கள் சிக்கிவருகின்றன. 

வாக்காளர்களுக்கு பணம், பொருள்கள் பட்டுவாடா செய்வதைத் தடுக்கும் நோக்கத்தில் நடைபெறும் இந்தச் சோதனையால் வியாபாரிகளும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் உரிய ஆவணங்களோடு பணம், பொருள்களை கொண்டு செல்லும்படி தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், அதையும் மீறி பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி மற்றும் பணம் ஆகியவை தினந்தோறும் தேர்தல் பறக்கும் படையினரிடம் சிக்கிவருகிறது. 

  பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்

இந்தநிலையில் சென்னைப் பூக்கடை, வேப்பேரி பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை வால்டாக்ஸ் சாலையில் பூக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜன் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் அதிகாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரில் 6 கிலோ 288 கிராம் எடையுள்ள தங்கக்கட்டிகள், நகைகள் இருந்தன. அது குறித்து தங்கக் கட்டிகளை கொண்டு சென்ற லோகேஷ் கந்தவேல் என்பவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். மேலும் அவரிடம் தங்கக்கட்டிகளுக்குரிய ஆவணங்கள் எதுவுமில்லை. இதனால் அவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தண்டையார்பேட்டை அரசுக்கருவூலத்தில் ஒப்படைத்தனர். தங்கக் கட்டிகளை சேலத்திலிருந்து கோயம்பேடுக்கு பஸ் மூலம் கொண்டு வந்து சவுகார்பேட்டைக்கு காரில் கொண்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது. 

இதையடுத்து சென்னை வேப்பேரி அழகப்பா ரோடு, வள்ளியம்மாள் ரோடு சந்திப்பில் தேர்தல் பறக்கும்படையினர் அதிகாரி பாலசுப்பிரமணியம் தலைமையில் வேப்பேரி போலீஸாருடன் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கால்டாக்சியை மடக்கி சோதனையிட்டனர். காருக்குள் ரூபாய்.31, 88, 415 இருந்தது. அதற்கு எந்தவித ஆவணங்களும் இல்லாததால் அவற்றை பறிமுதல் செய்தனர். பணத்தைக் கொண்டு சென்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் சிவக்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம், நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. 

 பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்,வெள்ளி

சென்னை சவுக்கார்பேட்டையில் நடந்த சோதனையில் சசிகாந்த் என்பவரிடமிருந்து 9 கிலோ வெள்ளிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பூக்கடை என்எஸ்சி போஸ் ரோட்டில் ஜெகதீஷ் என்ற  வியாபாரியிடமிருந்து 30 கிலோ எடையுள்ள வெள்ளி விளக்கு மற்றும் பாத்திரங்கள் பிடிபட்டன. என்எஸ்சி போஸ் ரோடு தேவராஜ முதலி தெரு சந்திப்பில் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய மற்றொரு சோதனையில் கீழப்பாக்கத்தைச் சேர்ந்த நகை வியாபாரி கீவன் ஜெயின் (51) என்பவரிடமிருந்து கணக்கில் வராத 30 லட்சம் பணம் மற்றும் 1,700 கிலோ தங்கம் ஆகியவை சிக்கின. என்எஸ்சி போஸ் ரோட்டில் உரிய ஆவணங்களின்றி பட்டரைக்கு பாலீஷ் போட எடுத்துச் செல்லப்பட்ட 12 கிலோ வெள்ளியை பறக்கும்படை அதிகாரிகள் கைப்பற்றினர்.  

 பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்,வெள்ளி

ஆந்திராவிலிருந்து சென்னைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சென்னையை அடுத்த செங்குன்றம் சோதனை சாவடியில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டபோது ஆந்திராவிலிருந்து சென்னைக்கு வந்த தனியார் பேருந்தில் ரூ.39,24,000 சிக்கியது. இந்தப் பணத்தை ஆந்திரா குண்டூரைச் சேர்ந்த ஷேக் சலாம் என்பவர் சென்னைக்கு கொண்டு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. போலீஸார் நடத்திய விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்டது ஹவாலா பணம் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர் சோதனையில் கட்டுக்கட்டாக பணமும் தங்கம், வெள்ளிப் பொருள்கள் சிக்குவதால் தொடர் கண்காணிப்பில் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர். 

ஒரே நாளில் லட்சக்கணக்கான ரூபாயும், பல லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளிப் பொருள்கள் சிக்கியுள்ளது. அதுதொடர்பான விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சம்பந்தப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடந்துவருகிறது.