`இந்த ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்!’‍- எடப்பாடியைப் புகழ்ந்த ராமதாஸ் | Women are safe in the AIADMK regime says Ramadoss

வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (23/03/2019)

கடைசி தொடர்பு:16:45 (23/03/2019)

`இந்த ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்!’‍- எடப்பாடியைப் புகழ்ந்த ராமதாஸ்

``மத்தியில் காங்கிரஸும், தமிழகத்தில் தி.மு.க-வும் ஆட்சியை இனி பிடிக்கவே முடியாது. அ.தி.மு.க ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்’’ என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பேசியுள்ளார்.

ஆற்காட்டில், பிரசாரம் செய்த ராமதாஸ்

அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில், அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று ஆற்காடு மற்றும் வாலாஜாபேட்டையில் தீவிர பிரசாரம் செய்தார். அப்போது பேசிய ராமதாஸ், ``தலை நிமிர்ந்துசெல்பவர்கள் அ.தி.மு.க கூட்டணியில் இருக்கிறோம். தலைகுனிந்தவர்கள் தி.மு.க கூட்டணியில் உள்ளனர். எங்களின் கூட்டணி தெளிந்த நீரோடை. தி.மு.க தலைமையிலான கூட்டணி, தேங்கிக் கிடக்கும் குட்டை நீரைப் போன்றது. கடந்த தேர்தலில் எங்களின் தேர்தல் அறிக்கையை, தி.மு.க 60 சதவிகிதம் காப்பியடித்தது. இந்த முறையும், பா.ம.க-வின் தேர்தல் அறிக்கையை 90 சதவிகிதம் காப்பியடித்துள்ளனர். விவசாய கடன் தள்ளுபடி மற்றும் நீட் தேர்வு ரத்து உட்படத் தமிழகத்தின் நலன் சார்ந்த பிரச்னைகளுக்காக பா.ம.க தொடர்ந்து குரல்கொடுக்கும்.

மத்தியில், ஆட்சி அதிகாரத்துடன் இருந்த தி.மு.க, தமிழக மக்களுக்காக ஒன்றும் செய்யவில்லை. நல்ல வருமானம் கிடைக்கும் இலாக்காவுக்காக மட்டுமே போராடினார்கள். 100 ஆண்டுக்காலமாக, ஒரு குடும்பத்தின் பிடியில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. அவர்களால், மத்தியில் இனி ஆட்சியைப் பிடிக்கவே முடியாது. அதேபோல்தான், தமிழகத்திலும் தி.மு.க-வால் ஆட்சியைக் கைப்பற்றமுடியாது. தி.மு.க-வை ஆரம்பித்த அறிஞர் அண்ணா, ஏழையாகவே வாழ்ந்துமறைந்தார். அந்தக் கட்சியில், இப்போது உள்ள தலைவர்கள் ஏழ்மையை ஒழிக்கமாட்டார்கள். ஏழைகளையே ஒழித்துவிடுவார்கள். அ.தி.மு.க ஆட்சியில் பெண்களும், பெண் குழந்தைகளும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். மக்கள் பிரச்னைகளுக்காக தொடர்ந்துபோராடி வரும் அ.தி.மு.க, பா.ம.க கூட்டணிக்கு ஆதரவு கொடுங்கள். ஏ.கே.மூர்த்தியை வெற்றிபெறச் செய்தால், அரக்கோணம் தொகுதி வளர்ச்சி பெறும்’’ என்றார்.