கிச்சன், டைனிங் ஹால்!- சகல வசதியில் ஊட்டிக்கு வந்த ஏசி மலை ரயில் | multi specialty mountain train coach ,nilgiris special train

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (23/03/2019)

கடைசி தொடர்பு:18:30 (23/03/2019)

கிச்சன், டைனிங் ஹால்!- சகல வசதியில் ஊட்டிக்கு வந்த ஏசி மலை ரயில்

சர்வதேச சுற்றுலா தளமாக விளங்கும் ஊட்டிக்கு ஏராளமான சிறப்புகள் உண்டு. அரசு தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, படகு இல்லம் ,பைக்காரா அருவி,ஊட்டி மலை ரயில் எனச் சுற்றுலா பயணிகளைக் கவர்ந்த பல சிறப்பம்சங்கள் உள்ளதால் ஆண்டுதோறும் சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் நீலகிரியைக் கண்டு ரசித்துச் செல்கின்றனர்.

ஊட்டி மலை ரயில்

ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டி மலை ரயிலில் பயணிக்க தவறுவதில்லை. தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநில மற்றும் வெளி நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மலை ரயிலில் பயணிக்க அதிக  ஆர்வம் காட்டுகின்றனர். நீலகிரி மலை ரயில் சேவை 1899-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பழமை வாய்ந்த இந்த ரயிலுக்கு யுனெஸ்கோ அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை இயக்கப்படும் நீலகிரி மலை ரயில் கல்லாறு, ஆடர்லி, ரன்னிமேடு, வெலிங்டன், அருவங்காடு, கேத்தி, லவ்டேல் ஆகிய ரயில் நிலையங்கள் வழியாகச் செல்கிறது. பசுமை நிறைந்த மலைப் பாதையின் இடையில் செல்லும் இந்த ரயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர். மேட்டுப்பாளையம்- குன்னூர் மலைப் பாதையில் பல்சக்கர தண்டவாளத்தில் நிலக்கரியிலும் , குன்னூர், உதகை இடையே பயோ டீசல் ரயில் என்ஜினாலும் இயக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளை மேலும் கவரும் வகையில் ரயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

டைனிங் ஹால்

வார இறுதி நாள்களில் சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் தற்போது நான்கு ரயில் பெட்டிகள் புதுப்பொலிவுடன் ஊட்டிக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த பெட்டிகள் சாதாரன பெட்டிகள் போல் இல்லாமல் வெளிப்பக்கம் முழுவதும் வினைல் ரேப்பர் முறையில் புல்வெளிகள், தேயிலை தோட்டங்கள், புலி ,யானை, சிறுத்தை, காட்டுமாடு உள்ளிட்ட வன  விலங்குகளும் மேலும் நீலகிரிக்கே உரித்தான ஓரிட வாழ்வுகளான நீலகிரி கருமந்தி, நீலகிரி வரையாடு, நீலகிரி மார்டின், நீலகிரி பிளை கேட்சர் என பல்வேறு விலங்குகளைத் தத்ரூபமாக வடிவமைத்துக் காண்போரை கவரும் வகையில்  வெளிப்புறங்களில் ஒட்டி உள்ளனர்.

மேலும் விஸ்டட் ஹோம் எனப்படும் மூன்று புறமும் கண்ணாடிகளைக் கொண்டு ஏ.சி.வசதியுடன் சிறப்பு பெட்டி ஒன்றை உருவாக்கி உள்ளனர். மேலும் இன்ஸ்பெக்ஷன் கார் எனப்படும் ரயில்வே அதிகாரிகளுக்கான பெட்டியில் கிச்சன், டைனிங் ஹால், டாய்லெட், டிஸ்கஷன் ரூம் என நினைத்துப் பார்க்க முடியாத வசதிகளுடன் ரயில்வே அதிகாரிகளுக்கான சிறப்பு பெட்டி ஒன்றை உருவாக்கி உள்ளனர். இந்த சிறப்பு பெட்டிகள் நான்கும் சோதனை ஓட்டமாக இன்று ஊட்டி மலை ரயில் நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் ஆச்சர்யத்துடன் பார்த்துச் சென்றனர். சுற்றுலா சேவைக்காக இந்த புதிய பெட்டிகள் சிறப்பு மலை ரயிலில் விரைவில் இணைக்கப்படவுள்ளது.