முதல்வர் பிரசாரத்தில் காற்றில் பறக்கும் தேர்தல் விதி - கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்? | Violation in Chief Minister's election campaign

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (23/03/2019)

கடைசி தொடர்பு:12:08 (25/03/2019)

முதல்வர் பிரசாரத்தில் காற்றில் பறக்கும் தேர்தல் விதி - கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்?

முதல்வர்

`தேர்தல் முறையாகவும், நியாயமாகவும் நடைபெற வேண்டுமென இந்திய தேர்தல் ஆணையம் பல விதிமுறைகள் வகுத்துள்ளது. அதை அனைத்து அரசியல் கட்சியினரும் கடைப்பிடிக்க வேண்டுமெனத் தொடர்ந்து அறிவுறுத்துவதோடு மீறும் பட்சத்தில் வழக்குகள் போடப்படுகிறது. ஆனால் முதல்வர் தன் தேர்தல் பிரசாரத்தில் அப்பட்டமான தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டும் வழக்குகள் பதிவு செய்யாமல் இருப்பது தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இழக்கச் செய்கிறது' என்கிறார்கள் தேர்தலை சந்திக்கும் போட்டியாளர்கள்.

இதுபற்றி மேலும் அவர்களிடம் கேட்டபோது, ''தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தன்னுடைய அ.தி.மு.க வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக நேற்று 22.3.2019ம் தேதி கருமந்துறை வெற்றி விநாயகர் கோயிலில் பூஜை புனஸ்காரங்கள் செய்து தன்னுடைய தேர்தல் பிரசாரப் பயணத்தை சென்டிமென்டாக தொடங்கினார்.

பிரசாரம்

முதல் நாளான நேற்று கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற வேட்பாளர் தே.மு.தி.க  சார்பாகப் போட்டியிடும் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷை ஆதரித்து கருமந்துறை, தும்பல், ஏத்தாப்பூர், புத்திரகவுண்டன்பாளையும், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம் பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அதையடுத்து அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் படையடுத்து வந்தார்கள்.

இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலின் பிரசாரத்தின் போது மூன்று வாகனங்களே பயன்படுத்த அனுமதி அளித்திருக்கிறது. ஆனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அளவுக்கு 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்பட்டது. ஆனால் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் யாரும் இதைக் கண்டுகொள்ளவில்லை. எந்த வழக்கும் பதிவும் செய்யவில்லை'' என்கிறார்கள்.

பிரசாரம்

இதுபற்றி சேலம் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ரோகிணி, ''தேர்தல் பிரசாரத்திற்கு பெர்மிஷன் வாங்கி வாகனங்கள் பயன்படுத்த வேண்டும் என்பது விதி இருக்கிறது. ஆனால் எத்தனை வாகனங்களுக்கு பெர்மிஷன் கொடுக்க வேண்டும் என்பது சொல்லப்படவில்லை. அவர்கள் பெர்மிஷன் வாங்கிய வாகங்களை தான் பயன்படுத்தியார்களா என்பது விசாரிக்கிறேன்'' என்றார்.