100 சதவிகித வாக்குப்பதிவு ... - சாதனைக்கு முயற்சி எடுக்கும் திண்டுக்கல் கலெக்டர்! | dindigul collector tries 100% Polling in election

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/03/2019)

கடைசி தொடர்பு:06:00 (24/03/2019)

100 சதவிகித வாக்குப்பதிவு ... - சாதனைக்கு முயற்சி எடுக்கும் திண்டுக்கல் கலெக்டர்!

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் நூறு சதவிகித வாக்குப்பதிவு நடை பெறுவதற்கான முயற்சியில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டாக்டர் வினய் தெரிவித்தார். தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் அலுவலரான டாக்டர் வினய். அப்போது பேசியவர், ''திண்டுக்கல் மாவட்டத்தில்  கடைசியாக வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் படி  8 லட்சத்து 66 ஆயிரத்து 715 ஆண்கள்,  9 லட்சத்து ஆயிரத்து 984 பெண்கள், 154 இதர வகுப்பினர் என மொத்தம் 17 லட்சத்து 68 ஆயிரத்து 853 வாக்காளர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். அதற்குப் பிறகு தொடர்ந்த திருத்தப் பணியில்  37 ஆயிரத்து 324 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 35 ஆயிரத்து 147 மனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம்  1456 ஆண்கள் மற்றும் 19 பெண்கள் என மொத்தம் 1475 ராணுவ வீரர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள்.  பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலில் இவர்கள் அனைவருக்கும் உரியக் காலத்தில்  வாக்குச் சீட்டுகள் அனுப்பப்பட்டு, வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.

திண்டுக்கல் கலெக்டர்

திண்டுக்கல் மாவட்டத்தில் சரித்திர சாதனையாக நூறு சதவிகித வாக்குப்பதிவு நடைபெற வேண்டும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். இளைஞர்கள், மாற்றுத் திறனாளிகளை கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். சுய உதவிக் குழுக்கள் மூலம் ரங்கோலி போட்டிகள், கலைக் குழுவினர் மூலம் தினசரி ஏதாவது ஒரு இடத்தில் நாடகம், கொடைக்கானலில் குதிரை பேரணி, அனைத்து இடங்களிலும் சைக்கிள் பேரணி, கல்லூரிகளில் வினா விடை போட்டிகள், கைப்பந்து மற்றும் கூடைப்பந்து போட்டி துவக்க விழாவில் விழிப்புணர்வு நிகழ்ச்சி, பார்வையற்றோர் கலைக்குழுவினர் மூலம் பாட்டு நிகழ்ச்சி, நகரின் முக்கிய இடங்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய போர்டுகள் மற்றும் செய்திகள் போன்ற நடவடிக்கைகள் மூலம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

பார்வையற்றோர் கலைக்குழு

மேலும் மாற்றுத்திறனாளிகள் எந்தவித கஷ்டமும் இல்லாமல் வாக்குப் பதிவு செய்ய வேண்டும். அதற்காக ஏராளமான தன்னார்வலர்களை ஏற்பாடு செய்திருக்கிறோம். மாற்றுத்திறனாளி வாக்காளர் பட்டியலில் குறியீடு செய்யப்பட்டுள்ளார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 10 ஆயிரத்து 184 மாற்றுத்திறனாளிகள் குறியீடு செய்யப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகளை அழைத்துச் செல்வதற்கு தேவையான சக்கர நாற்காலிகளை ஏற்பாடு செய்து வருகிறோம். மேலும் மாற்றுத்திறனாளிகள் தங்களது மொபைல் போனில் pwd app என்ற செயலியை பதிவிறக்கம் செய்து தேர்தல் தொடர்பான தங்களது தேவைகளை பதிவு செய்து கொள்ளலாம்.

 திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 2097 வாக்குச்சாவடிகளில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. 266 வாக்குச்சாவடிகளில் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் உரிய முறையில் அனைத்து தரப்பினராலும் பின்பற்றப்படுகிறதா எனக் கவனிக்கப்பட்டு வருகிறது. இதற்காகத் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி பொதுத் தேர்தலுக்கும் நிலக்கோட்டை சட்டமன்ற தேர்தலுக்கும் சேர்த்து மொத்தம் 204 மண்டல அலுவலகங்கள், 24 பறக்கும் படைகள், 16 வீடியோ டீம் உள்ளிட்ட பலவிதமான ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பறக்கும் படை மூலம் இதுவரை 14 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. பொது சொத்துகள் மற்றும் தனியார் சொத்துகளில் சுவர்களில் அச்சிடுதல், போஸ்டர், பேனர் போன்ற விதிமீறல்களுக்காக இதுவரை 79 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் அரசியல் கட்சியினர் அனுமதி கோரும் விண்ணப்பங்களை மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொண்டு தாமதமின்றி முடிவு செய்வதற்காக 'சுவிதா' (SUVIDHA) என்ற மொபைல் ஆப் இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களின் வசதிக்காக cVIGIL என்ற புதிய செயலியை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியை பொதுமக்கள் தங்களது மொபைல் போனில் பதிவிறக்கம் செய்துகொண்டு, தேர்தல் நடத்தை விதிகள் மீறல் தொடர்பான புகார்களை ஆதாரங்களுடன் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கலாம். அத்துடன் தேர்தல் தொடர்பான புகார்களுக்காக 1950 என்ற எண்ணை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திற்காக 1800 42 55 965 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த இரு எண்கள் வாயிலாகவும் தங்கள் புகார்களைத் தெரிவிக்கலாம். தேர்தல் தொடர்பாக கட்டுப்பாட்டு அறையில் இதுவரை 310 புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  திண்டுக்கல் நாடாளுமன்றம், நிலக்கோட்டை இடைத்தேர்தல் ஆகிய தேர்தலுக்காக 10 ஆயிரத்து எழுநூற்று எட்டு அலுவலர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு கணினி பதிவு செய்யப்பட்டுப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன'' என்றார். இந்த சந்திப்பின் போது, திண்டுக்கல் எஸ்.பி. சக்திவேல் உடனிருந்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க