“இந்தியக் காங்கிரஸ் அல்ல இத்தாலி காங்கிரஸ்” - சாத்தூர் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு | we want pure Indian prime minister - TN Minister Rajendra balaji Controversial speech

வெளியிடப்பட்ட நேரம்: 07:34 (24/03/2019)

கடைசி தொடர்பு:07:34 (24/03/2019)

“இந்தியக் காங்கிரஸ் அல்ல இத்தாலி காங்கிரஸ்” - சாத்தூர் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு

ராஜேந்திரபாலாஜி

கலப்பினம் இல்லாத, கலப்படம் இல்லாத ஒரிஜினல் பிரதமர் இந்தியாவுக்குத் தேவை. தற்போது இருப்பது இந்திய காங்கிரஸ் அல்ல. இத்தாலி காங்கிரஸ் என தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

 

சாத்தூர் இடைத்தேர்தல் அ.தி.மு.க வேட்பாளர் மற்றும் விருதுநகர் மக்களவைத் தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் அறிமுகக் கூட்டம் சாத்தூரில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் அ.தி.மு.க வேட்பாளர் ராஜவர்மன், தே.மு.தி.க வேட்பாளர் அழகர்சாமி ஆகியோர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.அப்போது தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் பேசும்போது, சாத்தூர் தொகுதியில் ஏற்கனவே வெற்றி பெற்றவர் தற்போது பணம் வாங்கிக் கொண்டு வேறு அணிக்கு சென்றுவிட்டார். தற்போது இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் இறுதி மூச்சு வரை அமைச்சருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். நாம் ஏறிவந்த ஏணியை மறக்கக் கூடாது. இன்னும் ஒரு மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது அனைவருக்கும் அமைச்சர் பதவிகளை வாரி வழங்குவார் எனத் தெரிவித்தார்.

வேட்பாளர்கள்

 

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசும்போது, தி.மு.க கூட்டணி ஒவ்வாத கூட்டணி. ஒருவரை ஒருவர் கொல்லவே அந்த கூட்டணி அமைந்துள்ளது. அ.தி.மு.க.வில் உள்ள கூட்டணி தெய்வீகமான கூட்டணி. இந்திய துணை ராணுவப் படையினர் 40 க்கும் அதிகமான பேரை காஷ்மீரில் தீவிரவாதிகள் படுகொலை செய்தபோது ஒரு நாள் முழுவதும் மோடி தூங்கவில்லை. சில நாட்களிலேயே பதிலடி கொடுக்கப்பட்டு தீவிரவாத முகாம்கள் தாக்கப்பட்டன. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் தீவிரவாத தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டாலும் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மோடியை கண்டு சீனா, பாகிஸ்தான் நாடுகள் பயப்படுகின்றன. இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் பிடிபட்டபோது நரேந்திரமோடியை கண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பயந்தார். மிரண்டார். நடுங்கினார். அதன்பின்னர் தான் அபிநந்தன் விடுதலையானார்.

அ.தி.மு.க கூட்டம்

வீரமான பிரதமர் நரேந்திரமோடி.கலப்பினம் இல்லாத, கலப்படம் இல்லாத ஒரிஜினல் ஒருவர் தான் இந்திய பிரதமராக வர வேண்டும். அது மோடி தான். அவர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்து சாதாரண தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கியவர். ராஜீவ்காந்தியோடு இந்திய காங்கிரஸ் முடிந்துவிட்டது. தற்போது இருப்பது இத்தாலி காங்கிரஸ். இதை இந்திய மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இந்த தொகுதியில் நான் நிற்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். எப்போது என்ன வேண்டுமானாலும் நீங்கள் என்னை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.