“சேலத்தில் தேர்தல் கணக்கு ஸ்டார்ட்!” - பரப்புரைக்கு முன்பே பக்கா ப்ளான் | Political Parties are started Election Campaign in Salem

வெளியிடப்பட்ட நேரம்: 10:41 (24/03/2019)

கடைசி தொடர்பு:10:41 (24/03/2019)

“சேலத்தில் தேர்தல் கணக்கு ஸ்டார்ட்!” - பரப்புரைக்கு முன்பே பக்கா ப்ளான்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி 21-ம் தேதி சேலம் வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பூத் வாரியாக 10,000 வீதம் சுமார் 2 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல தி.மு.க தலைவர் ஸ்டாலின் 22ம் தேதி சேலம் வருவதற்கு 2 நாட்களுக்கு முன்பு பூத் வாரியாக 5,000 வீதம் சுமார் 1 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல்

தேர்தல் விதி அமுலுக்கு வந்த பிறகு தேர்தல் அலுவலர்கள் ரோடு ரோடாக, தெரு தெருவாக நின்று கொண்டு வாகன சோதனையில் ஈடுபடுகிறார்கள். இதனால் சிறு,குறு முதலாளிகள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் அரசியல் கட்சிகளுக்கு இதனால் சிறிதளவும் பாதிப்பு இல்லை. வழக்கம் போல பணப் பட்டுவாடா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதுபற்றி தேர்தல் களத்தை உற்று நோக்கும் சமூக செயற்பாட்டாளர்களிடம் விசாரித்த போது, ''தமிழகத்தைப் பொருத்த வரை அ.தி.மு.க., தி.மு.க., இந்த இரண்டு கட்சிகளே பிரதான கட்சிகள். பணப் பட்டுவாடா செய்வதிலும் இவர்களே கைதேர்ந்தவர்கள்.  எனக்கு அ.தி.மு.க., தி.மு.க இரண்டு கட்சிகளிலும் நம்பிக்கைக்குரிய முக்கிய நிர்வாகிகள் நல்ல பழக்கத்தில் இருந்து வருகிறார்கள்.

இரண்டு கட்சி தலைமையில் இருந்தும் கடந்த மாதமே மாவட்ட வாரியாக பணம் வந்து விட்டது. இந்த பணம் இரண்டு வகையில் பிரித்து கொடுக்கப்படும். 1. பூத் வாரியாக கட்சிக் காரர்களுக்கு வழங்கப்படும் நிதி. 2. கட்சி கட்டமைப்பின் படி பொதுமக்களுக்கு வழங்கப்படும் நிதி.

பூத் வாரியாக கட்சிக்காரர்களுக்கு வழங்கப்படும் நிதி :

சேலம் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 1846 பூத் சாவடிகள் இருக்கிறது. ஒவ்வொரு பூத்திற்கும் 5 தவணைகளாகப் பணம் வழங்கப்படும். அதை பூத் நிர்வாகிகள் பிரித்துக் கொள்ளுவார்கள்.  அ.தி.மு.க-வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 21-ம் தேதி சேலம் வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பூத் வாரியாக 10,000 வீதம் சுமார் 2 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல தி.மு.க தலைவர் ஸ்டாலின் 22-ம் தேதி சேலம் வருவதற்கு 2 நாட்களுக்கு முன்பு பூத் வாரியாக 5,000 வீதம் சுமார் 1 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. இது ஆரம்ப தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது. இப்படி இன்னும் 4 முறை கொடுக்கப்படும். இந்த வகையில் சுமார் 10 முதல் 15 கோடி வழங்கப்படும்.  

திமுக

கட்சி கட்டமைப்பின் படி பொதுமக்களுக்கு வழங்கப்படும் நிதி:
மாவட்ட செயலாளர் தொகுதி பொறுப்பாளரிடம் கொடுப்பார். தொகுதி பொறுப்பாளர் தனக்குக் கீழே இருக்கும் ஒன்றிய செயலாளர், நகரச் செயலாளர், பகுதி செயலாளர்களிடம் கொடுப்பார்கள். இவர்கள் தங்களுக்கு கீழே உள்ளே பேரூராட்சி செயலாளர், ஊராட்சி செயலாளர், வார்டு செயலாளர்களுக்குக் கொடுப்பார்கள். இவர்களிடம் இருந்து நேரடியாகப் பொதுமக்களுக்கு வந்து சேரும். இத்தொகை தேர்தலுக்குக் கடைசி 3 நாட்களுக்கு முன்பே பிரித்து வழங்கப்படும். இந்த வகையில் சுமார் 25 முதல் 30 கோடி வரை வழங்கப்படும். ஆக மொத்தம் ஒரு மக்களவை தொகுதிக்கு குறைந்தது 35 கோடியில் இருந்து 50 கோடி வரை இரு கட்சிகளும் செலவு செய்வார்கள்'' என்றார்.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க