"மீனவர்கள் 11 பேர் சிறைபிடிப்பு; மீன்பிடி சாதனங்கள் சேதம்"- இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் | 11 fishermen arrested by Sri Lankan navy

வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (24/03/2019)

கடைசி தொடர்பு:10:50 (24/03/2019)

"மீனவர்கள் 11 பேர் சிறைபிடிப்பு; மீன்பிடி சாதனங்கள் சேதம்"- இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்

 ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 11 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடித்து செல்லப்பட்டனர். மேலும் பல்வேறு படகுகளில் இருந்த மீன் பிடி சாதனங்களைச் சேதப்படுத்தி விரட்டியடித்தனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு


ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை 576 விசைப்படகுகள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் இன்று அதிகாலை பாரம்பாரியமாக மீன்பிடிக்கும் பகுதிகளில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் பல்வேறு படகுகளில் இருந்த மீன் பிடி சாதனங்களான வலைகள், போட் பலகை, ஜி.பி.எஸ் கருவி உள்ளிட்டவற்றைச் சேதப்படுத்தி விரட்டியடித்தனர்.இதன் பின் அங்கிருந்து சென்ற இலங்கை கடற்படையினர் மீன்பிடித்து விட்டுக் கரை திரும்பிக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 2 விசைப்படகுகளை சிறைபிடித்துச் சென்றனர்.

ஜோஸ்வா என்பவரது படகில் சென்ற கெபிராஜ், செல்வம், முருகன், பிரசிடன், நாகராஜன், சூலியன்ஸ், ராஜ் மற்றும் முருகேசன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சென்ற இருளப்பன், பால்ராஜ், ராமநாதன், பூமிநாதன் ஆகிய 11 மீனவர்களையும் சிறை பிடித்துச் சென்றனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சிறை பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்களை விசாரணைக்காகக் காரை நகர் கடற்படை முகாமிற்குக் கொண்டு சென்றுள்ளனர். 

 கடந்த 4 ஆண்டுகளாக இலங்கை கடற்படையினரால்  தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக சிறை பிடிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு சிறைபிடிக்கப்படும் மீனவர்கள் அவ்வப்போது விடுவிக்கப்பட்டாலும் அவர்களது வாழ்வாதாரமான படகுகள் விடுவிக்கப்படுவதில்லை. இதனால் இலங்கை வசம் தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 150-க்கும் அதிகமான படகுகள் பராமரிப்பு இன்றியும், மீட்க முடியாத நிலையிலும் உள்ளன. தங்கள் படகுகளை மீட்டுத் தரக்கோரி மீனவர்கள் பல போராட்டம் நடத்தியும் தீர்வு கிட்டவில்லை. ’

இந்நிலையில் தமிழக மீனவர்களின் படகுகள் தொடர்ச்சியாகச் சிறை பிடிக்கப்பட்டு வருகின்றன. இதனால் தமிழக மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மோடி ஆட்சியில் 1900 மீனவர்களை இலங்கை சிறையில் இருந்து மீட்டுள்ளதாகக் கூறி வாக்கு கேட்டு வரும் நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரமான படகுகளை மீட்டுத்தர எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மீனவர்கள் வருந்தி வரும் நிலையில், மீண்டும் மீனவர்கள் சிறை பிடித்துச் செல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.