எம்.ஜி.ஆருடன் தன்னை ஒப்பிட்டுப் பேசிய நயினார் நாகேந்திரன் - அ.தி.மு.க தொண்டர்கள் அதிர்ச்சி! | BJP lok sabha Candidate Nayinar Nagendran starts Election Campaign in ramanathapuram

வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (24/03/2019)

கடைசி தொடர்பு:12:00 (24/03/2019)

எம்.ஜி.ஆருடன் தன்னை ஒப்பிட்டுப் பேசிய நயினார் நாகேந்திரன் - அ.தி.மு.க தொண்டர்கள் அதிர்ச்சி!

 எம்.ஜி.ஆருடன் தன்னை ஒப்பிட்டுக் கொண்ட பா.ஜ.க வேட்பாளர் நயினார்  நாகேந்திரன் பதிலால் அ.தி.மு.க தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

நயினார் நாகேந்திரன்

ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராகத் திருநெல்வேலியை சேர்ந்த முன்னாள் அமைச்சரும் பா.ஜ.க துணைத் தலைவருமான நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். நீண்ட இழுபறிக்குப் பின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நயினார் நாகேந்திரன் நேற்று மாலை ராமநாதபுரம் வந்தார். மாவட்ட எல்லையில் அவருக்கு அமைச்சர் மணிகண்டன் உள்ளிட்ட அ.தி.மு.க-வினர், பா.ஜ.க நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இதன் பின் அங்கிருந்து ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் ஆதரவு கேட்டு சென்றார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் மணிகண்டனின் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன்,  ''குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கேற்ப நிறைவேற்றப்படும். ராமநாதபுரம் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கைகளான விமான நிலையம், அரசு மருத்துவக் கல்லூரி ஆகியன மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் மூலம் அமைக்கப்படும். தமிழக மீனவர்கள் சர்வதேச எல்லையைத் தாண்டி செல்வதால் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படுகின்றனர். பிரதமர் மோடி தலைமையிலான கடந்த  5 ஆண்டு கால பா.ஜ.க ஆட்சியில் இலங்கை கடற்படை சிறைபிடித்த 1,900 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்''  என்றார்.

நயினார் நாகேந்திரன் வாக்கு சேகரிப்பு


இதைத் தொடர்ந்து, வெளியூரைச் சேர்ந்த வேட்பாளரான  நீங்கள் இங்கு போட்டியிடுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன் ''என்னை வெளி மாவட்ட நபர் என வேறுபடுத்திப் பார்க்க வேண்டாம். திருநெல்வேலியில் இருந்து ஒன்றரை மணி நேரத்தில் ராமநாதபுரம் வந்து விட முடியும்.  கடந்த காலங்களில் அரசியல் தலைவர்கள் கூட தொகுதி மாறிப் போட்டியிட்டுள்ளனர். கருணாநிதி சென்னையில் இருந்து கொண்டு எங்கெல்லாம் போட்டியிட்டார். ஏன் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்., கூட சென்னையில் இருந்து ஆண்டிபட்டி, அருப்புக்கோட்டை தொகுதிகளில் போட்டியிடவில்லையா என எம்.ஜி.ஆருடன் தன்னை ஒப்பிட்டுப் பதிலளித்தார்.

மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவரான எம்.ஜி.ஆருடன் தன்னை ஒப்பிட்டுப் பதிலளித்த நயினார் நாகேந்திரனின் பதிலால் அமைச்சர் மணிகண்டன் இல்லத்தில் குழுமியிருந்த அ.தி.மு.க தொண்டர்கள்  அதிர்ச்சியடைந்தனர்.  இந்த பேட்டியின் போது  தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன்,  அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி, பாஜக., மாவட்ட தலைவர் முரளிதரன்,  மாநில துணைத் தலைவர் குப்புராம், தேமுதிக., மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா, அதிமுக முன்னாள் மாவட்ட செயலர் ஆனி முத்து மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.