தொகுதி மாறி ஓட்டுக் கேட்ட பா.ஜ.க அமைச்சரால் கலகலப்பு! | Bjp minister Alphonse Kannantanam Lok sabha Election Campaign

வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (24/03/2019)

கடைசி தொடர்பு:11:30 (24/03/2019)

தொகுதி மாறி ஓட்டுக் கேட்ட பா.ஜ.க அமைச்சரால் கலகலப்பு!

கேரள மாநிலம் எர்ணாகுளம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரான முன்னாள் மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானம் சாலக்குடி தொகுதியில் வாக்கு சேகரித்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

அல்போன்ஸ் கண்ணந்தானம்


கேரள மாநிலம் எர்ணாகுளம் தொகுதிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானம் பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சாலக்குடி தொகுதிக்கு ஏ.என்.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கொச்சி வந்தார் முன்னாள் அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானம். விமான நிலையத்தில் பா.ஜ.க. தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். உடனே உற்சாகமான அல்போன்ஸ் கண்ணந்தா உடனடியாக வாக்குசேகரிக்கும் படலத்தில் இறங்கினார். விமான நிலையத்தில் பணிசெய்யும் வடமாநில தொழிலாளர்களிடம் வாக்குகேட்டார். பின்னர் கே.எஸ்.ஆர்.டி.சி. பேருந்தில் ஏறி தனது எர்ணாகுளம் தொகுதிநோக்கி பயணித்தார்.

அல்போன்ஸ் கண்ணந்தானம்

தனது தொகுதி எல்லை வருவதற்குள்ளாகவே சாலக்குடி தொகுதிக்குட்பட்ட ஆலுவா பறவூர் பகுதியில் திடீரென இறங்கினார். இறங்கிய வேகத்தில் பஸ் ஸ்டாப்பில் பஸ்சுக்கு காத்திருந்த பயணிகளிடம் தனக்கு ஓட்டுபோடவேண்டும் எனக்கூறி வாக்கு சேகரித்தார். அப்போது உடன் இருந்த பா.ஜ.க. நிர்வாகிகள் இது சாலக்குடி தொகுதி என அல்போன்ஸ் கண்ணந்தானத்தின் காதில் கிசுகிசுத்தனர். இதையடுத்து அங்குநின்ற நிர்வாகியின் காரில் ஏறி எர்ணாகுளம் தொகுதிநோக்கி புறப்பட்டார். பா.ஜ.க. மத்திய அமைச்சர் தொகுதி மாறி வாக்குகேட்ட சம்பவம் கேரளத்தில் கலகலப்பை ஏற்படுத்தியது.