`நான் மருத்துவர்... தம்பிதுரையால் சீர்கெட்ட கரூரை நலமாக்குவேன்' - நாம் தமிழர் கட்சி வேட்பாளர்! | Naam Tamilar party candidate slams thambidurai

வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (24/03/2019)

கடைசி தொடர்பு:13:30 (24/03/2019)

`நான் மருத்துவர்... தம்பிதுரையால் சீர்கெட்ட கரூரை நலமாக்குவேன்' - நாம் தமிழர் கட்சி வேட்பாளர்!

"கரூர் தொகுதி பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாத, சீர்கெட்ட தொகுதியாக உள்ளது. அடிப்படையில் மருத்துவரான நான், கரூர் எம்.பியாகி, கரூர் நாடாளுமன்றத் தொகுதியை நலமாக்கப் பாடுபடுவேன்" என்று நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கருப்பையா தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சியினர் மேளம்தாளம் முழங்க வந்தபோது...

கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், மணப்பாறை, வேடச்சந்தூர், விராலிமலை உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகள் வருகின்றன. அ.தி.மு.க சார்பில் தம்பிதுரை மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். தி.மு.க கூட்டணியில் கரூர் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, அந்த கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் ஜோதிமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அ.ம.மு.க சார்பில் அந்த கட்சியின் மாவட்டச் செயலாளர் தங்கவேல் வேட்பாளராகியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக மருத்துவர் கருப்பையா என்பவரை அந்த கட்சி தலைமை அறிவித்தது.

வேட்புமனு தாக்கல் செய்யும் கருப்பையா

கரூர் நகரின் முக்கிய பகுதிகளில் வழியாக மேளதாளங்கள் முழங்க தங்களுக்கு தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள இரட்டைக் கரும்பு சின்னத்தை இருசக்கர வாகனங்களில் கட்டிக்கொண்டு ஊர்வலமாக வந்தனர். பின்னர், நாம் தமிழர் கட்சியின் கரூர் வேட்பாளர் டாக்டர் கருப்பையா கரூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அன்பழகன் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிகழ்ச்சியில், நாம் தமிழர் கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் நன்மாறன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


 கருப்பையா

கரூரில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கருப்பையா செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது, "கரூர் தொகுதிக்கு புதிய திட்டங்கள் கொண்டு வருவதைவிடச் சீரழிந்து கிடப்பதைச் சரி செய்வதற்கு நேரம் சரியாக இருக்கும். அடிப்படையில் நான் ஒரு மருத்துவர். தம்பிதுரையால் அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் சீரழிந்து கிடக்கும் கரூர் தொகுதியை எம்.பியானவுடன் நலமாக்கப் பாடுபடுவேன். மேலும், விவசாயிகள் பிரச்னை, குடிநீர்ப் பிரச்னை, கரூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களைத் தூர்வார கூடிய அனைத்தையும் செய்வோம். தொழில்கள் நிறைந்த தொகுதியான கரூரை இன்னும் சிறப்பாக மேம்படுத்துவோம். கல்வி, வேலைவாய்ப்புகளில் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவோம். மேலும், சொத்து விவரங்கள் அனைத்தையும் தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பித்து இருக்கின்றோம்" என்றார்.