`இதைவிடத் துரோகம் வேறு எங்கும் இருக்கமுடியாது' - பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம்! | Pon.Radhakrishnan slams congress candidate h.vasanthakumar

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (24/03/2019)

கடைசி தொடர்பு:14:00 (24/03/2019)

`இதைவிடத் துரோகம் வேறு எங்கும் இருக்கமுடியாது' - பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம்!

நாங்குநேரி மக்களை நிர்க்கதியாக்கி விட்டுவிட்டு இங்கு வருவது ஏன் என்று வசந்தகுமார் பதில் சொல்ல வேண்டும். இதைவிடத் துரோகம் வேறு எங்கும் இருக்கமுடியாது எனப் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பொன் ராதாகிருஷ்ணன்


கன்னியாகுமரி நாடாளுமன்ற வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் பதியில் இன்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஏழை இந்து மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குவதாகக் கூறி வாக்கு கேட்டவர் இப்போது ஏமாற்றிவிட்டார் என வசந்தகுமார் குற்றம்சாட்டியிருப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள். ஏழை இந்து மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வாங்கிக் கொடுப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். காங்கிரஸ் கட்சிதான் இதற்கு முழுக்க முழுக்க எதிர்ப்பு தெரிவித்தது. கல்வி உதவித்தொகை விஷயத்தில் பின்வாங்கவோ, முயற்சிசெய்யாமலோ இல்லை. அரசியல் ஆதாயத்திற்காக அவர்கள் இதைக் கூறுகிறார்கள்.

பொன் ராதாகிருஷ்ணன்

எந்த மதத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகையில் பாகுபாடு பார்க்கக்கூடாது என்பது ஆத்மார்த்தமான என் கொள்கை. கல்வி உதவித்தொகையின் ஒரு அங்கமாகத்தான் 10 சதவீத இட ஒதுக்கீட்டைப் பார்க்க வேண்டும். நாங்கு நேரியில் எந்த வளர்ச்சிப் பணியையும் வசந்தகுமார் செய்யவில்லை. நாங்குநேரி மக்களை நிர்க்கதியாக்கி விட்டுவிட்டு இங்கு வருவது ஏன் என்று வசந்தகுமார் பதில் சொல்ல வேண்டும். இதைவிடத் துரோகம் வேறு எங்கும் இருக்கமுடியாது. மண்ணிற்குச் சொந்தக்காரர்களாக விளங்கிய மார்ஷல் நேசமணி, பொன்னப்பநாடார், சுவாமிதாஸ், ஜேம்ஸ், தாணுலிங்கநாடார் ஆகிய தலைவர்கள் இந்த மண்ணில் போட்டியிட்டிருக்கிறார்கள். உழைத்திருக்கிறார்கள், வெற்றிபெற்றிருக்கிறார்கள். வெற்றிபெறவில்லை என்றாலும் இங்கு அரசியல் நடத்தி, இந்த மக்களுக்காக வாழ்ந்தார்கள். பழுத்த மரத்தில் வந்து விழக்கூடிய வௌவால் போன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் வந்து விழுந்தது கிடையாது. என் வாழ்வும், வளமும் இந்த மாவட்டத்தைச் சார்ந்த மக்களைச் சார்ந்துதான் இருந்தது. இதற்கு அப்பாற்பட்டுப் போனது கிடையாது. ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிட இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. வடமாநிலங்களில் தோல்வி உறுதி என நினைத்ததால் தென் மாநிலங்களை நோக்கி காங்கிரஸ் தலைவர்கள் வருகிறார்கள்" என்றார்.