‘பூதக்கண்ணாடியில் பார்த்தாலும் குறை கண்டுபிடிக்க முடியாது’ - எடப்பாடி பழனிசாமி சவால்! | Can not find fault in our regime says cm Edappadi Palanisamy

வெளியிடப்பட்ட நேரம்: 15:01 (24/03/2019)

கடைசி தொடர்பு:15:01 (24/03/2019)

‘பூதக்கண்ணாடியில் பார்த்தாலும் குறை கண்டுபிடிக்க முடியாது’ - எடப்பாடி பழனிசாமி சவால்!

‘‘பூதக்கண்ணாடியை வைத்துப் பார்த்தாலும், எங்கள் ஆட்சியில் குறை கண்டுபிடிக்க முடியாது. கொடநாடு கொலை விவகாரத்தில் தி.மு.க-வுக்கு தொடர்பிருக்கிறது. அது சம்பந்தமாக விசாரணை நடத்தப்படும்’’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

ஏ.சி.சண்முகத்துக்கு வாக்குசேகரித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில், அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2-ம் நாளாக சத்துவாச்சாரியில் இன்று தீவிர பிரசாரம் செய்தார். அப்போது பேசிய முதல்வர், ‘‘இந்த நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஏழை மக்கள் நோய்வாய்ப்பட்டால், ஏ.சி.எஸ் மருத்துவமனைகளில் இலவசமாகச் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். மேலும், இங்குள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த தலா 100 ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு, ஏ.சி.எஸ் கல்லூரிகளில் கட்டணமின்றி இலவசமாகப் படிக்க ‘சீட்’ ஒதுக்கப்படும் என்று ஏ.சி.சண்முகம் வாக்குறுதி கொடுத்துள்ளார்.

இந்தியாவிலேயே, கல்வியில் முதன்மை மாநிலமாகத் தமிழகம் விளங்குகிறது. மருத்துவத் துறையில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளோம். தி.மு.க தலைவர் ஸ்டாலின் போகிறப் போக்கில் பேசுகிறார். சாமி கும்பிடுபவர்களை பார்த்திருக்கிறேன். பக்தி இருப்பவரைப் பார்த்திருக்கிறேன். கடவுள் என்று தன்னைத்தானே சொல்பவராகப் பழனிசாமியைத்தான் பார்க்கிறேன் என்று திருவண்ணாமலையில் நேற்று பேசியிருக்கிறார் ஸ்டாலின். நான், எப்போதாவது அப்படிச் சொல்லியிருக்கிறேனா?, அவரால் குறை கண்டுபிடிக்க முடியவில்லை. ஸ்டாலின் கடவுள் இல்லை என்று சொல்கிறார். ஆனால், அவரின் குடும்பத்தினர் விழுந்து, விழுந்து சாமி கும்பிடுகிறார்கள். சாமி கும்பிடுவது, ஒருவரின் தனிப்பட்ட உரிமை. 

ஏ.சி.சண்முகத்துக்கு வாக்குசேகரித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

நான், ஏதோ... கொலை செய்துவிட்டேன் என்று சொல்கிறார். கொடநாடு கொலையை கண்டுபிடித்ததே அ.தி.மு.க அரசுதான். அந்த கொலை குற்றவாளியைச் சிறையில் அடைத்ததும் நாங்கள்தான். ஆனால், அந்த குற்றவாளியை ஜாமினில் எடுத்தது தி.மு.க. அவர்கள் ஏன் ஜாமினில் எடுக்கவேண்டும். எனவே, கொடநாடு கொலைக்கும், தி.மு.க-வுக்கும் சம்பந்தம் இருப்பதாக மக்கள் சந்தேகிக்கிறார்கள். அந்த சந்தேகத்தை போக்கும்வகையில், அ.தி.மு.க அரசு விசாரணை மேற்கொள்ளும். நீங்க... என்னதான் பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் எங்களிடம் குறை கண்டுபிடிக்க முடியாது. ஸ்டாலின், ஏதோ ஊழல்... ஊழல்... என்று சொல்கிறார். நான், பல கூட்டங்களில் சொல்லிவிட்டேன். தி.மு.க என்றாலே, அக்மார்க் முத்திரை பதித்த ஊழல் கட்சி என்று எல்லோருக்கும் தெரியும். ஊழலைப் பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு தகுதியில்லை’’ என்றார் காட்டமாக.