அ.தி.மு.க கூட்டணியால் அதிருப்தி! - தி.மு.கவில் இணைந்த ராமநாதபுரம் த.மா.கா நிர்வாகிகள் | Ramnad TMC cadres joins DMK

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (24/03/2019)

கடைசி தொடர்பு:17:30 (24/03/2019)

அ.தி.மு.க கூட்டணியால் அதிருப்தி! - தி.மு.கவில் இணைந்த ராமநாதபுரம் த.மா.கா நிர்வாகிகள்

 ராமநாதபுரம் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தனர்.

தி.மு.கவில் இணைந்த ராமநாதபுரம் த.மா.கா நிர்வாகிகள்

 அ.தி.மு.க-வுடன் காங்கிரஸ் கூட்டணி சேர்ந்ததை எதிர்த்து ஜி.கே.மூப்பனாரால் உருவானது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி. அவரது மறைவிற்குப் பின் அக் கட்சியின் தலைவரான ஜி.கே.வாசன் தனது த.மா.கா-வை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து மத்திய அமைச்சராக இருந்து வந்தார். மத்தியில் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜி.கே.வாசன், மீண்டும் த.மா.கா-வை துவங்கினார். இதன் பின் கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டார். ஆனால் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்கவில்லை.

இந்நிலையில் அவரது ஆதரவாளர்கள் பலரும் வெவ்வேறு கட்சிகளுக்கு விலகிச் சென்றனர். இந்தநிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை ஜி.கே.வாசன் சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு த.மா.கா தொண்டர்களிடையே நிலவி வந்தது. ஆனால், அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக ஜி.கே.வாசன் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இணைந்து தஞ்சாவூர் தொகுதியை வாங்கி வந்தார். இதனால் த.மா.கா தொண்டர்கள் மேலும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இதனிடையே ராமநாதபுரம் கிழக்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ரவிச்சந்திர ராமவன்னி தலைமையில் அக்கட்சியின் மாவட்ட பொருளாளர் நாகராஜன், ராமநாதபுரம் நகர் தலைவர் வழக்கறிஞர் முனியசாமி மற்றும் கீழக்கரை, ஆர்.எஸ்.மங்களம் உள்ளிட்ட பல்வேறு வட்டார தலைவர்கள் உள்ளிட்டோர் த.மா.கா-வில் இருந்து விலகி சென்னையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தனர். ஏற்கெனவே அக்கட்சியின்  மேற்கு மாவட்டத் தலைவராக இருந்து வந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணனின் மகன் சோ.பா.ரங்கநாதன் அக்கட்சியில் இருந்து வெளியேறினார். தற்போது கிழக்கு மாவட்டத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளும் த.மா.கா-வில் இருந்து விலகியுள்ளனர்.