`இந்த நூற்றாண்டின் தலைசிறந்த ஜோக்!’ - ராமதாஸை விமர்சித்த தமிழச்சி தங்கப்பாண்டியன் | DMK's Tamizhachi Thangapandiyan slams Ramadoss

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (24/03/2019)

கடைசி தொடர்பு:17:00 (24/03/2019)

`இந்த நூற்றாண்டின் தலைசிறந்த ஜோக்!’ - ராமதாஸை விமர்சித்த தமிழச்சி தங்கப்பாண்டியன்

அ.தி.மு.க ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியிருப்பது இந்த நூற்றாண்டின் தலைசிறந்த ஜோக் என தென்சென்னை மக்களவைத் தொகுதியின் தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் விமர்சித்திருக்கிறார். 

தமிழச்சி தங்கப்பாண்டியன்

அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆற்காடு மற்றும் வாலாஜாபேட்டையில் தீவிர பிரசாரம் செய்தார். அப்போது பேசிய ராமதாஸ், ``தலை நிமிர்ந்துசெல்பவர்கள் அ.தி.மு.க கூட்டணியில் இருக்கிறோம். தலைகுனிந்தவர்கள் தி.மு.க கூட்டணியில் உள்ளனர். தி.மு.க-வை ஆரம்பித்த அறிஞர் அண்ணா, ஏழையாகவே வாழ்ந்துமறைந்தார். அந்தக் கட்சியில், இப்போது உள்ள தலைவர்கள் ஏழ்மையை ஒழிக்கமாட்டார்கள். ஏழைகளையே ஒழித்துவிடுவார்கள். அ.தி.மு.க ஆட்சியில் பெண்களும், பெண் குழந்தைகளும் பாதுகாப்பாக இருக்கிறார்கள்’’ என்று பேசியிருந்தார். 

ராமதாஸ்

சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தென்சென்னை தொகுதி தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன், ராமதாஸின் கருத்து இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஜோக் என்று விமர்சித்தார். மேலும் அவர் கூறுகையில், ``அ.தி.மு.க கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்துவருகிறது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்ந்து 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்திருக்கிறது. ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்களின் துணையுடன்தான் அந்த விவகாரம் இவ்வளவு காலம் வெளியில் தெரியாமல் இருந்திருக்கிறது. இந்த சூழலில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாக அவர் சொல்லுவது உண்மையிலேயே மிக வருத்தமாகவும் நகைச்சுவைக்குரிய விஷயமாகவும்தான் இருக்கிறது. இதுபோன்ற விவகாரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் சொன்னபிறகும், பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிகப்பட்ட பெண்ணின் பெயர் அவர் படிக்கும் கல்லூரி போன்ற விவரங்களை அந்த மாவட்டக் காவல்துறை அதிகாரி வெளியிடுகிறார். அந்த அதிகாரி தெரியாமல் பெயர்களை வெளியிட்டுவிட்டார் என அமைச்சரும் அவருக்கு வக்காலத்து வாங்குகிறார். இப்படிப்பட்ட சூழலில் முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைத்து அய்யா ராமதாஸ், ஒன்றுமே நடக்கவில்லை என்று கூறுவது வருத்தமளிக்கிறது’’ என்றார்.