`சத்தியமா நான் சொல்லல; அய்யாதான் சொன்னாரு!’- ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸைக் கலாய்த்த ஸ்டாலின் | stalin slams ops and eps

வெளியிடப்பட்ட நேரம்: 16:48 (24/03/2019)

கடைசி தொடர்பு:16:48 (24/03/2019)

`சத்தியமா நான் சொல்லல; அய்யாதான் சொன்னாரு!’- ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸைக் கலாய்த்த ஸ்டாலின்

``ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் டயர் நக்கிகள் என்று கடுமையாக விமர்சனம் செய்தார்கள் அன்புமணியும், ராமதாஸும். இன்று அவர்களோடுதான், அ.தி.மு.க கூட்டணி வைத்துள்ளது. இதைவிட ஒரு கேவலம் வேண்டுமா’’ என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் திருவண்ணாமலையில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசினார். 

ஸ்டாலின்

தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துத் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். 19-ம் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, திருவாரூரில் பிரசாரத்தைத் தொடங்கி தஞ்சை, நாகப்பட்டினம், சேலம், தர்மபுரி, அரூர் ஆகிய இடங்களில் பிரசாரத்தை முடித்துவிட்டார். இன்று திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி தி.மு.க வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்துத் திருவண்ணாமலை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசினார். திருவண்ணாமலை தொகுதி வாக்காளர்களைச் சந்தித்த மகிழ்ச்சியுடன், ``பெருமையுடன், பூரிப்புடன் நம்பிக்கையோடு நாடும் நமதே நாற்பதும் நமதே என்ற முழக்கத்தோடு வந்து இருக்கிறேன். இந்தத் தொகுதியில் நமது வேட்பாளரை எதிர்த்து நிற்கும் அ.தி.மு.க வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி யார், எப்படிப்பட்டவர் என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும்.

ஸ்டாலின்

முத்துகுமாரசாமி தற்கொலை வழக்கில், ஜெயலலிதாவால் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுச் சிறைக்குச் சென்றவர். முத்துக்குமாரசாமி மனைவியின் தாலி அக்ரி கிருஷ்ணமூர்த்தியால் அறுக்கப்பட்டது. இது நடந்தது தி.மு.க ஆட்சியின்போது அல்ல. அ.தி.மு.க ஆட்சியில். இது எல்லாம் தெரிந்தும் அவரைத் தான் வேட்பாளராக அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதுபோன்ற வேட்பாளர்களைத் தான் எடாப்பாடிக்கு பிடிக்கும். அக்ரி கிருஷ்ணமூர்த்தியை உடனடியாகக் கைது செய்து சி.பி.ஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று ராமதாஸ் அப்போது அறிக்கை வெளியிட்டார். ஆனால் இப்போது அவரையே ஆதரிப்பதுதான் காலத்தின் கொடுமை. 

வறுமையை ஒழிப்பதற்கு நல்ல பல திட்டங்களை அ.தி.மு.க அரசு செய்து வருகிறது என்று பெரிய அய்யா ராமதாஸ் கூறி வருகிறார். யாருடைய வறுமையை ஒழித்து இருக்கிறது?. பெரிய அய்யா, சின்ன அய்யாவுடைய வறுமையைத்தான் ஒழித்து இருக்கிறது. 10 தலைமுறைக்கான வறுமையை ஒழித்து இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் டயர் நக்கிகள் என்று யார் சொன்னது. சத்தியமாக நான் சொல்லவில்லை. என் அப்பா கருணாநிதி அதுபோன்ற தவறான வார்த்தைகளைக் கற்றுக் கொடுக்கவில்லை. டயர் நக்கிகள் என்று சொன்னது மருத்துவர் சின்ன அய்யா அன்புமணி தான். 

ஸ்டாலின்

ஸ்டாலின் திமிர் பிடித்தவர் என்று எடப்பாடி சொல்கிறார். என்னைப்பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது எடப்பாடிக்கு. புழுவைப் போல நெளிந்தது சென்று காலில் விழுந்து முதல்வர் பதவியை வாங்கியவருக்கு என்னைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது . ஜெயலலிதா சாவில் மர்மம் இருக்கிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் முழு வீச்சில் விசாரணை நடத்தி குற்றவாளிகளைச் சிறைக்கு அனுப்புவோம்" என்றார் ஆவேசமாக.

நீங்க எப்படி பீல் பண்றீங்க