உள்ளாட்சித் தேர்தலில் பொறுப்பு உறுதி! - அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தும் அ.தி.மு.க | ADMK cadres upset over Sattur by election candidate selection

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (24/03/2019)

கடைசி தொடர்பு:19:30 (24/03/2019)

உள்ளாட்சித் தேர்தலில் பொறுப்பு உறுதி! - அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தும் அ.தி.மு.க

சாத்தூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் மீது அக்கட்சியினர் அதிருப்தியில் இருப்பதால் உள்ளாட்சித் தேர்தலின் போது பொறுப்பு வழங்குவதாகக் கூறி நிர்வாகிகள் சமாதான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராஜேந்திரபாலாஜி

விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று சாத்தூர். தமிழக முன்னாள் முதல்வர் கு.காமராஜர் 1957, 1962-ம் ஆண்டும் நடந்த தேர்தல்களில் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அ.தி.மு.க மற்றும் தி.மு.க சார்பில் 6 முறை வெற்றி பெற்றார். தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 2011-ம் ஆண்டு தேர்தலில் சாத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றார். தற்போது தி.மு.க மற்றும் அ.தி.மு.கவினரே இந்த தொகுதியை தக்க வைத்துள்ளனர்.

2016 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் எஸ்.ஜி.சுப்பிரமணியன், தி.மு.க சார்பில் வி.ஸ்ரீனிவாசன், ம.தி.மு.க சார்பில் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இதில் தி.மு.க வேட்பாளரை விட 4427 வாக்குகள் அதிகம் பெற்ற அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.ஜி.சுப்பிரமணியன் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

அதிமுக

ராஜவர்மன்அ.தி.மு.கவில் இருந்து சுப்பிரமணியன் அ.ம.மு.கவில் இணைந்ததால் அவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது அ.தி.மு.க இரண்டு அணிகளாக பிரிந்ததால் அ.தி.மு.க வாக்குகளும் இரண்டாக பிரிந்துள்ளன. இந்நிலையில் மக்களவைத் தேர்தலோடு சேர்ந்து சாத்தூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் தி.மு.க சார்பில் மீண்டும் வி.ஸ்ரீனிவாசனும், அ.ம.மு.க சார்பில் எஸ்.ஜி.சுப்பிரமணியனும், அ.தி.மு.க சார்பில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் நண்பரான ராஜவர்மனும் போட்டியிடுகின்றனர். இந்தத் தொகுதியில் மொத்தம் 2,32,537 வாக்காளர்கள் உள்ளனர்.

அமைச்சர் ராஜேந்திரபாலாஜிதனக்கு நெருக்கமானவர் என்பதால் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தான் ராஜவர்மனுக்கு சீட் வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால் இப்பகுதி மக்களிடம் போதிய அறிமுகம் இல்லாத இவருக்கு வாய்ப்பு வழங்கியிருப்பதை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விரும்பவில்லை. இந்த விஷயம் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கும் தெரியும். ஒவ்வொரு இடைத்தேர்தல் வெற்றி என்பது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள மிகவும் முக்கியமான ஒன்று. எனவே அ.தி.மு.க இடைத்தேர்தலில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் அதிருப்தியாளர்கள் தேர்தல் நேரத்தில் வேட்பாளருக்கு எதிரான வேலைகளில் ஈடுபட்டால் என்ன செய்வது என்பதை உணர்ந்த அமைச்சர் கட்சி நிர்வாகிகளை சமாளிக்க படாத பாடுபட்டு வருகிறார்.

 

சாத்தூரில் நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அவர், இந்த தொகுதியில் நான் தான் போட்டியிடுகிறேன். எப்போது என்ன வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளுங்கள். தற்போது பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இந்த தொகுதியில் குடிநீர், சாலை, அடிப்படை வசதிகள் என எந்த தேவை என்றாலும் என்னை தொடர்பு கொள்ளுங்கள் எனக் கூறிய அவர், எல்லோரும் என் தொடர்பு எண்ணை குறித்துக் கொள்ளுங்கள் என மொபைல் எண்ணையும் கொடுத்தார்.

`உள்ளாட்சித் தேர்தலில் அனைவருக்கும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும்’ என ஆறுதல் கூறினார் கூட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம். வேட்பாளரை அறிவிக்கும் முன்பே அவரை நிறுத்தலாமா? வேண்டாமா? வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பதை கலந்து பேசாமல் இப்போது பேசி என்ன செய்ய முடியும் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.