`இது மோடியுடைய அ.தி.மு.க; வெற்றி எங்களுக்கு எளிது!’ - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி | We will easily win against ADMK, says TNCC president KS Alagiri

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (24/03/2019)

கடைசி தொடர்பு:18:30 (24/03/2019)

`இது மோடியுடைய அ.தி.மு.க; வெற்றி எங்களுக்கு எளிது!’ - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் ஏற்படுவது குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி விளக்கமளித்திருக்கிறார். 

ஸ்டாலினைச் சந்தித்த காங்கிரஸ் வேட்பாளர்கள்

தமிழகத்தில் தி.மு.க கூட்டணியில் மக்களவைத் தேர்தலில் களமிறங்கும் காங்கிரஸ் புதுவை தொகுதி உள்பட 10 தொகுதிகளில் களமிறங்குகிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் களமிறங்கும் வேட்பாளர்கள் தி.மு.க தலைவர் ஸ்டாலினை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரியும் உடனிருந்தார். சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரியிடம் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படாதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

ஸ்டாலினைச் சந்தித்த காங்கிரஸ் வேட்பாளர்கள்

அந்தக் கேள்விக்குப் பதிலளித்த கே.எஸ்.அழகிரி, ``சிவகங்கை தொகுதி வேட்பாளர் இன்று மாலை அறிவிக்கப்படுவார். அந்தத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் ஏற்படக் காரணம், ஒரு குடும்பத்தில் ஒருவருக்கே பதவி என தலைவர் ராகுல் காந்தி முடிவெடுத்திருப்பதே. இதேபோன்று நாடு முழுவதும் 40 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் தலைவர்களின் குடும்பத்தினர் வாய்ப்புக் கேட்டுள்ளனர். அந்தத் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்திய பின்னர் இன்று மாலை அந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர்’’ என்றார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன் கே.எஸ்.அழகிரி

அ.தி.மு.க போட்டி குறித்து பேசிய கே.எஸ்.அழகிரி, ``எங்களை எதிர்த்து அ.தி.மு.க போட்டியிட்டால் வெற்றிபெறுவது எளிது. ஏனென்றால் இன்றைய அ.தி.மு.க என்பது எம்.ஜி.ஆர் காலத்து அ.தி.மு.கவோ அல்லது ஜெயலலிதா காலத்து அ.தி.மு.கவோ அல்ல; மோடியுடைய அ.தி.மு.க. திராவிட பாரம்பர்யத்தில் வந்தவர்கள் பா.ஜ.க கூட்டணியை விரும்பவில்லை. எனவே, அ.தி.மு.க தோழர்களே காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அ.தி.மு.கவின் வெற்றி என்பது சூறையாடப்பட்ட ஒன்று. அவர்களால் வெற்றிபெற முடியாது. எங்களுக்கு எளிது’’ என்றார்.