`தஞ்சை ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு ரூ.150 கோடி கமிஷன்!' - அ.தி.மு.க மீது தி.மு.க வேட்பாளர் குற்றச்சாட்டு | Thanjavur dmk candidate says allegations against admk

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (24/03/2019)

கடைசி தொடர்பு:20:00 (24/03/2019)

`தஞ்சை ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு ரூ.150 கோடி கமிஷன்!' - அ.தி.மு.க மீது தி.மு.க வேட்பாளர் குற்றச்சாட்டு

தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஆளும் அதிமுக அரசு ரூ.150 கோடி கமிஷன் பெற்றுள்ளதாகவும், இதற்காகவே அவசர கதியில் பணியைத் தொடங்கியதாகவும் தஞ்சைச் சட்டமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் பரபரப்பு குற்றம் சாட்டினார்.

திமுக வேட்பாளர் டி.கே.ஜி.நீலமேகம்

தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டி.கே.ஜி.நீலமேகம் இன்று காலை அன்னை சத்யா விளையாட்டு அரங்கிற்குச் சென்று அங்கிருந்தவர்களிடமும் இன்னும் பிற இடங்களிலும் வாக்குகள் சேகரித்தார். தொடர்ந்து கொடிமரத்து மூலை பகுதியில் தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, ``தஞ்சாவூர் நகரில் 16வது வார்டில் எனது தந்தை டி.கே.கோவிந்தன் அதன் பிறகு நான் மொத்தம் 60 ஆண்டுகாலமாக வார்டு உறுப்பினராகத் தொடர்ச்சியாக இருந்தோம். இதன் மூலம் நகரில் உள்ள மக்களின் பிரச்னைகளை நன்கு அறிந்து தீர்த்து வைத்து வருகிறேன். அ.தி.மு.க - அ.ம.மு.க கட்சி வேட்பாளர்களிடம் பணம் இருக்கிறது. என்னிடம் என் தலைவர் ஸ்டாலின், மக்கள் மற்றும் எங்கள் கட்சி தொண்டர்களும் இருக்கிறார்கள். அவர்களை நம்பியே நான் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.

டி.கே.ஜி.நீலமேகம்

தஞ்சாவூரில் அ.தி.மு.க மாநகராட்சி நிர்வாகத்தை ஆண்டபோது, தண்ணீரே வராத சாமந்தான்குளம், சிவகங்கை குளம், அய்யன்குளத்தை தூர்வாருகிறேன் என்கிற பெயரில் பல கோடி ஒதுக்கீடு செய்து முறைகேட்டில் ஈடுபட்டது. அதே போல் ஸ்மார்ட் சிட்டி என்கிற பெயரில் நான்கு கோட்டை சுவர் பகுதிகளில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களை திடீரென எந்த கால அவகாசமும் கொடுக்காமல் வீடுகளை இடித்து அவர்களை அப்புறப்படுத்தியுள்ளனர். மாணவ, மாணவிகளின் இந்த ஆண்டு படிப்பு முடியட்டும் என்று கேட்டும் கொஞ்சம் கூட இரக்கம் காட்டவில்லை அதிகாரிகள். இதனால் அந்த மக்கள் பல இடங்களில் தற்போது சொல்லமுடியாத துயரத்தில் வசித்து வருகின்றனர். தேர்தல் வருகிறது என்பதற்காக ஸ்மாட் சிட்டி திட்டப் பணிகளுக்கு அவசர அவசரமாக டெண்டர் விட்டு பணிகளை தொடங்கியுள்ளனர்.

டி.கே.ஜி.நீலமேகம்

இதனால் ஆளுங்கட்சிக்கு ரூ.150 கோடி வரை கமிஷன் கிடைத்துள்ளது. 10 சதவீத கமிஷனுக்காகவே ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் அவசர கதியில் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த திட்டத்தின் மூலம் காமராஜ் மார்கெட், சரபோஜி மார்கெட், பழைய பேருந்து நிலையம் ஆகியவை அகற்றப்பட உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பெரும் இடையூற்றுக்கு ஆளாவார்கள். தி.மு.க ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டங்கள் தடுத்து நிறுத்தப்படும். என்னை எம்எல்ஏவாக தேர்வு செய்தால் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தொகுதி முழுவதும் வலம் வந்து குறைதீர்க்கும் கூட்டம் நடத்தி அதில் மக்கள் வைக்கும் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க