அ.ம.மு.க நிர்வாகிக்குக் கொலைமிரட்டல் விடுத்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்! - ஆடியோவால் பரபரப்பு | ADMK District Secretary threatens AMMK cadre

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (24/03/2019)

கடைசி தொடர்பு:21:00 (24/03/2019)

அ.ம.மு.க நிர்வாகிக்குக் கொலைமிரட்டல் விடுத்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்! - ஆடியோவால் பரபரப்பு

குமரி மாவட்ட அ.ம.மு.க. இளைஞர் பாசறை இணைச் செயலாளர் சிவாவிற்கு அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் அசோகன் மிரட்டல் விடும் ஆடியோ வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பேஸ்புக் பதிவு

கன்னியாகுமரி மாவட்ட அ.ம.மு.க. இளைஞர் பாசறை இணைச் செயலாளராக இருப்பவர் சிவா. இவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளருக்கு எதிராக தொண்டர்கள் போர்க்கொடி என்ற தலைப்பில் ஒரு கடிதத்தை ஷேர் செய்திருந்தார். அதில் அ.தி.மு.க. கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலார் அசோகன், இதுவரையும் மூன்றேகால் கோடி ரூபாய் சம்பாதித்து விட்டதாகவும், ஆனால் தொண்டர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்பதுபோன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோகன் அ.ம.மு.க. மாவட்ட பாசறை இணைச் செயலாளர் சிவாவிற்கு போன் செய்து ஃபேஸ்புக் பக்கத்தில் தன்னைப்பற்றி அவதூறு பரப்பியது குறித்து கேட்கிறார்.

அசோகன்

மேலும், சிவாவிற்கு கொலை மிரட்டல் விடுவதுடன் அச்சில் ஏற்ற முடியாத வாசகங்களால் அர்ச்சனை செய்துள்ளார். இந்த தொலைபேசி உரையாடலை அ.ம.மு.க. நிர்வாகி சிவா வாட்ஸ் அப்பில் பரப்பியிருக்கிறார். இதுகுறித்து குமரி மாவட்ட அ.ம.மு.க. இளைஞர் பாசறை இணைச் செயலாளர் சிவா கூறும்போது, "ஃபேஸ்புக்கில் வந்ததை நான் ஷேர் செய்தேன். அதற்கு அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் அசோகன் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளேன்" என்றார்.

இதுகுறித்து அ.தி.மு.க. கிழக்கு மாவட்டச் செயலாளர் அசோகனிடம் கேட்டதற்கு, ``நான் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளராக சிறப்பாக செயல்பட்டு வருகிறேன். சிலரது தூண்டுதலால் அ.ம.மு.க.வைச் சேர்ந்த சிவா என்னைப் பற்றி ஃபேஸ்புக்கில் அவதூறு பரப்பியதால் சற்று டென்சன் ஆகிவிட்டேன்" என்றார்.