`காங்கிரஸின் பலம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றிபெறுவேன்!’ - கார்த்தி சிதம்பரம் | Karti Chidambaram to contest Lok Sabha elections from Sivaganga

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (24/03/2019)

கடைசி தொடர்பு:22:30 (24/03/2019)

`காங்கிரஸின் பலம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றிபெறுவேன்!’ - கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் கட்சியின் பலம் மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் சிவகங்கைத் தொகுதியில் வெற்றிபெறுவேன் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். 

கார்த்தி சிதம்பரம்

தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுவை என 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களான திருநாவுக்கரசர், ஜோதிமணி உள்ளிட்டோர் தமிழகக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி சகிதமாக தி.மு.க தலைவர் ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்துப் பேசினர். மரியாதை நிமித்தமான சந்திப்பு இது என்று கூறப்பட்டது. சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரியிடம் சிவகங்கை தொகுதி வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் ஏற்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ``குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முடிவெடுத்திருப்பதால்தான், சிவகங்கை தொகுதி வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் ஏற்படுகிறது’’ என்று கூறிய அவர், இன்று மாலையில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றும் பதிலளித்தார். 

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்

இந்தநிலையில், சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிவகங்கை உள்பட நாடு முழுவதும் உள்ள 10 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 4 தொகுதிகள், பீகார் மாநிலத்தில் 3 தொகுதிகள், தமிழகம், ஜம்மு காஷ்மீர் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 
சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறித்து பேசிய கார்த்தி சிதம்பரம், `காங்கிரஸ் கட்சியின் வலிமை மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் வெற்றிபெறுவேன் என்று நம்புகிறேன். இரண்டாவது முறையாகத் தேர்தலில் போட்டியிடுகிறேன்’’ என்று தெரிவித்தார்.