தேர்தலுக்காக மின்சாரம்! - கோவை தூமனூர் கிராமத்தின் சோகம் தெரியுமா? | Sad story of Coimbatore tribe village

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (25/03/2019)

கடைசி தொடர்பு:07:00 (25/03/2019)

தேர்தலுக்காக மின்சாரம்! - கோவை தூமனூர் கிராமத்தின் சோகம் தெரியுமா?

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அருகே இருக்கிறது தூமனூர் என்ற பழங்குடி கிராமம். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால், அடிப்படை வசதிகள் ஏதும் இந்த கிராமத்துக்கு செய்து தரப்படவில்லை. 2017-ம் ஆண்டு இறுதியில் தான் இங்கு மின்சாரம் கொடுக்கப்பட்டது. அதுவும் ஒரே ஒரு வீட்டுக்குத்தான். சேம்புக்கரை, மிளகாய்பதி என்று அருகில் உள்ள கிராமங்களிலும் இதே நிலைதான்.

தூமனூர் பள்ளி

2016-க்கு முன்பு நடந்த தேர்தல்களில் ஆனைக்கட்டி அரசு பழங்குடியினர் உயர்நிலைப் பள்ளிக்கு சென்றுதான் இந்த மக்கள் வாக்களித்து வந்தனர். இந்நிலையில், 2016 சட்டசபை தேர்தலின் போது முதன் முதலாக தூமனூர் அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச் சாவடி மையமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்போது ஜெனரேட்டரின் உதவியுடன் தான் வாக்குப் பதிவு நடந்தது. இதையடுத்து, ஏப்ரல் 18-ம் தேதி நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தூமனூர் பள்ளிக்கு மின்சாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட ஆண்டு கோரிக்கையை தேர்தலை மையமாக வைத்துக் கொடுத்தாலும், அந்த மக்கள் ஒரு விதத்தில் மகிழ்ச்சியாகத் தான் ஏற்றுக் கொண்டனர். ஆனால், "வீடுகளே இல்லாத இடத்தில் மின்சாரம் இருந்து என்ன சாமி பலன்?" என்று கேள்வி எழுப்புகின்றனர் தூமனூர் பழங்குடி மக்கள். இதன் முழு விபரம் குறித்து அறிய தூமனூர், சேம்புக்கரை கிராம பழங்குடி மக்களிடம் பேசினோம்.

"எங்கள் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன. இவையெல்லாம் எம்.ஜி.ஆர் காலத்து வீடுகள் என்பதால், 2016-17 ஆண்டில், இங்குப் 44 பசுமை வீடுகள் கட்டுவதற்கான பணிகளைத் தமிழக அரசு தொடங்கியது. நாங்கள் காலம் காலமாக வாழ்ந்த வீடுகள் இடிக்கப்பட்டன.  ஜாப் ஆர்டர் வந்த 90 நாள்களில் வீடு கட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் தற்போது வரை ஒரு வீடு கூட முழுமையாகக் கட்டித்தரப்படவில்லை.

தூமனூர் பசுமை வீடுகள்

இதனால், பலர் இந்த கிராமத்தை விட்டே வெளியேறிவிட்டனர். மீதம் இருப்பவர்கள், இருக்கும் சில வீடுகளில் அடைந்து கிடக்கிறோம். அதிகாரிகளிடம் கேட்டால் சரியான பதில் வருவதில்லை.  இன்னும் எத்தனை நாள்களுக்குத்தான் நாங்கள் அடைந்து கிடப்பது?. எனவே, தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவில் இருக்கிறோம்" என்றனர் அந்த மக்கள்.

அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், இதுபோன்ற பழங்குடி கிராமங்களைத் தேர்தலுக்காக மட்டும் எட்டிப் பார்க்காமல், அன்றாட வாழ்க்கையில் அவர்களுக்கு என்ன என்பதை அறிந்து, அதைச் செய்து கொடுப்பதே உண்மையான ஜனநாயகம்.