``இந்தச் சத்தம் ஸ்டாலின் காதில் ஒலிக்க வேண்டும்” - திருவள்ளூரில் முதல்வர் பேச்சு | E.P.S in thiruvallur election campaign

வெளியிடப்பட்ட நேரம்: 07:25 (25/03/2019)

கடைசி தொடர்பு:07:47 (25/03/2019)

``இந்தச் சத்தம் ஸ்டாலின் காதில் ஒலிக்க வேண்டும்” - திருவள்ளூரில் முதல்வர் பேச்சு

முதல்வர் பழனிசாமி .  

திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் அ.தி.மு.க நாடாளுமன்ற வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து, நேற்று மாலை ஏழு மணிக்கு திருவள்ளூர்-செங்குன்றம் சாலையில், திறந்த வேனில் இருந்தபடியே பிரசாரம் செய்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அப்போது, ``தமிழகத்தில்  நமது சக்தி என்னவென்று இந்தத் தேர்தலில் நிரூபித்துக் காட்ட வேண்டும். இந்தியாவில் சிறப்பான திறமையான பிரதமரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நான் ஆளில்லாத இடத்தில் பிரசாரம் செய்வதாக ஸ்டாலின் கூறுகிறார். இங்கு பாருங்கள். இங்கு ஒலிக்கும் சத்தம் ஸ்டாலின் காதில் ஒலிக்க வேண்டும். ஸ்டாலின் ஆணவமாகப் பேசுகிறார். அவரின் ஆணவப்பேச்சுக்கு  முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அ.தி.மு.க ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று நினைக்கும் துரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். நாட்டின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். அதற்கு திறமையான பிரதமரை நாம் உருவாக்க வேண்டும். அப்போதுதான் தமிழகம் பாதுகாப்பாக இருக்கும். எனவே, திருவள்ளூர் நாடாளுமன்ற வேட்பாளர் வேணுகோபாலுக்கும் பூந்தமல்லி சட்ட மன்ற வேட்பாளர் வைத்தியநாதனுக்கும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்று பேசினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருவதற்கு இரண்டு மணிநேரம்  முன்னதாக போலீஸார் போக்குவரத்தை நிறுத்தினர். இதனால், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இதேபோல, வெங்கல் பகுதியிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நேற்று எடப்பாடி பழனிசாமி வேணுகோபாலை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
நேற்று, அவருக்கு தொண்டை சரியில்லாததால் ஏழு நிமிடம் மட்டுமே பேசினார்.