`இன்னொரு முறை பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால், தேர்தல் என்பதே இருக்காது!’ - எச்சரித்த ஆ.ராசா | Parliament election candidate raja program at avinashi

வெளியிடப்பட்ட நேரம்: 07:45 (25/03/2019)

கடைசி தொடர்பு:07:45 (25/03/2019)

`இன்னொரு முறை பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால், தேர்தல் என்பதே இருக்காது!’ - எச்சரித்த ஆ.ராசா

ஆ. ராசா

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, நேற்று அவிநாசியில் கூட்டணி கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போது அவர், "இது தேசத்தைக் காப்பாற்றுவதற்காக நடைபெறுகின்ற தேர்தல். தற்போது ஜனநாயகம், மதச்சார்பின்மை,  சோஷியலிசம் ஆகிய மூன்றுக்கும் ஆபத்து வந்துள்ளது. இன்னொரு முறை பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் இனி தேர்தல் என்பதே இருக்காது. அரசியல் சட்டத்துக்கே அவசியம் இருக்காது. தூக்கியெறிந்துவிடுவார்கள். ஐந்தாண்டு காலம் நாடாளுமன்ற உறுப்பினாராக நான் இருந்தபோது எவ்வாறு பணியாற்றினேன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். தற்போது இன்னொரு முறை எனக்கு வாய்ப்பு கொடுத்தால், அதைவிட சிறப்பாகப் பணியாற்றுவேன்” என்றார்.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ராசா, ``தமிழக அரசு அறிவித்திருக்கும் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் என்பது வெறும் ஏமாற்று வேலை. அந்தத் திட்டத்துக்கு காளிங்கராயன் கால்வாயில் இருந்து பெருகின்ற உபரி நீர் திட்டம் என்றுதான் பெயர் வைக்க வேண்டும். அந்தத் திட்டத்தைக் கொண்டுவந்துவிட்டு, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றப்போவதாக ஆளும் அ.தி.மு.க அரசு சொல்வது நகைப்புக்குரியது. தி.மு.க-வின் ஆட்சிக் காலத்தில் நான் மத்திய அமைச்சராக இருந்தபோது, அன்றைய முதலமைச்சர் கருணாநிதியின் அறிவுறுத்தலின்படி, தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்து பொதுப்பணித்துறை அதிகாரிகளையும் அழைத்து கூட்டம் நடத்தினேன். அதில் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் ஒரு முன்னோடித் திட்டம், அதை நிறைவேற்றவும் சாத்தியக்கூறுகள் உள்ளன. அந்தத் திட்டத்தை அத்திக்கடவில் இருந்துதான் தொடங்க வேண்டும் என்ற முழு உத்வேகத்துடன் முடிவு எடுத்தோம். ஆனால், அதன்பின் தி.மு.க ஆட்சி அமையவில்லை. அந்தத் திட்டத்தை நிறைவேற்றாமல், சிறிய அளவிலான திட்டத்தை நிறைவேற்றப் பார்க்கிறார்கள். யானையைக் காட்டி பூனையை நிறுத்தியவாறு, அத்திக்கடவு திட்டம் என்றுகூறி, காளிங்கராயன் கால்வாய் உபரி நீர் திட்டத்தை இங்கு நிறைவேற்றப்பார்க்கிறார்கள்” என்றார்.