`ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்த்துக்கும் ஏற்பட்ட பிரச்னைக்கு தி.மு.க-வின் சூழ்ச்சியே காரணம்’ -பிரேமலதா | Premalatha talks about clash between jayalalitha and vijayakanth

வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (25/03/2019)

கடைசி தொடர்பு:09:32 (26/03/2019)

`ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்த்துக்கும் ஏற்பட்ட பிரச்னைக்கு தி.மு.க-வின் சூழ்ச்சியே காரணம்’ -பிரேமலதா

``அ.தி.மு.க - தே.மு.தி.க கூட்டணியை சதிசெய்து பிரித்தவர்கள் தி.மு.க-வினர்தான்" என தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா தெரிவித்தார்.

பிரேமலதா

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க போட்டியிடுகிறது. மக்களவைத் தொகுதியில் தே.மு.தி.க வேட்பாளர் அழகர்சாமி மற்றும் சாத்தூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் ராஜவர்மன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் விருதுநகர் மக்களவைத் தொகுதி ஆலோசனைக் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா, தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பிரேமலதா,  ``அ.தி.மு.க - தே.மு.தி.க கூட்டணி என்பது இயற்கையான கூட்டணி. தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகிய 3 பேரும்தான் சினிமாத்துறையில் இருந்து வந்து அரசியலில் மாபெரும் இடத்தைப் பிடித்தவர்கள். ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனதிலும் இடம்பிடித்தவர்கள். எங்கள் படுக்கையறையில் எம்.ஜி.ஆர்- ஜானகி அம்மாள் போட்டோ மட்டும்தான் இருக்கும். விஜயகாந்துக்கு எம்.ஜி.ஆர் பெயர் பொறித்த மோதிரத்தையும், ஜெ.ஆர். என்ற பெயர் பொறித்த மோதிரத்தை எனக்கும் ஜானகியம்மாள் கொடுத்தார். அதை பொக்கிஷம் போல பாதுகாத்துவருகிறோம்.

ராஜேந்திரபாலாஜி

இந்தக் கூட்டணி அமையக் கூடாது என்பதற்காக எதிர்க்கட்சியினர் எவ்வளவோ புரளியைக் கிளப்பினர். ஆனால் நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பதுபோல இந்தக் கூட்டணி அமைந்துள்ளது. அதற்கு துரைமுருகனுக்கு நன்றி. 2011 -ம் ஆண்டு அ.தி.மு.க - தே.மு.தி.க  கூட்டணி வெற்றிபெற்றது. ஆனால், அப்போது விஜயகாந்துக்கும் ஜெயலலிதாவுக்கும் சட்டமன்றத்தில் ஏற்பட்ட மிகப்பெரும் பிரச்னைக்குப் பின்னால் தி.மு.க-வின் சூழ்ச்சி இருந்தது. தி.மு.க-வினர் பிளவை ஏற்படுத்த சதிசெய்து, அந்தக் கூட்டணியை முறித்தனர். எம்.ஜி.ஆர் ஆட்சியில் 15 ஆண்டுகள் கருணாநிதி ஆட்சிக்கு வரமுடியவில்லை. அதேபோல, விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த பிறகு இன்றுவரை தி.மு.க ஆட்சிக்கு வரவில்லை. சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்களை அசாதாரண சக்தியாக மாற்றும் வல்லமை படைத்தவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த்.

பிரேமலதா

உலகத்திலேயே சிறந்த மருத்துவமனையில் சிகிச்சையளித்திருந்தால் ஜெயலலிதாவை காப்பாற்றியிருக்கலாம். வரும் சட்டமன்ற, மக்களவைத் தேர்தல்களில் அ.தி.மு.க-தே.மு.தி.க கூட்டணி தொடரும். ஸ்டாலின் அவர்களே, சாதிக்பாட்சா கொலைக்கு யார் காரணம் என்பதை ஒப்புக்கொண்டு எடப்பாடி மீது கொலை குற்றச்சாட்டை சுமத்துங்கள். கச்சத்தீவு, ஸ்டெர்லைட், முல்லைப் பெரியாறு, மீனவர் பிரச்னை, மணல் கொள்ளை, மதுக்கடை திறப்பு என தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் தி.மு.க-தான் முக்கியக் காரணம். சினிமாவில் மட்டுமே நடிக்கத் தெரிந்த ஜெயலலிதாவும், விஜயகாந்த்துக்கும் மக்கள் முன் நடிக்கத் தெரியாது. இனி தி.மு.க ஆட்சி தமிழ்நாட்டில் எப்போதும் வராது. கூட்டணிக் கட்சியினர் யாரும் ஈகோ இல்லாமல் தேர்தல் வெற்றிக்காக உழைக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

பார் ஏலம் எடுப்பது தொடர்பாக கூட்டம் முடிந்த பின் அ.தி.மு.க நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது. மச்சராஜா மற்றும் தர்மலிங்கம் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். அப்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவர்களை விலக்கிவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.