``கண்ணியம் குறையாத வகையில் பேசுங்கள்!” - ராதாரவிக்கு ஸ்டாலின் கடும் கண்டனம் | Dmk Leader MKStalin Condemns Actor Radharavi Speech

வெளியிடப்பட்ட நேரம்: 09:40 (25/03/2019)

கடைசி தொடர்பு:09:40 (25/03/2019)

``கண்ணியம் குறையாத வகையில் பேசுங்கள்!” - ராதாரவிக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்

சினிமா நிகழ்ச்சியொன்றில் நடிகர் ராதாரவி பெண் கலைஞர்கள் குறித்து பேசியதற்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராதா ரவி

`கொலையுதிர் காலம்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி கலந்துகொண்டு பேசினார். இந்த விழாவில் பெண்கள் குறித்து அவர் பேசியது கடும் சர்ச்சையைக் கிளப்பியது. நடிகை நயன்தாரா பேயாகவும் சீதையாகவும் நடிக்கிறார். இப்போ எல்லாம் யார் வேண்டுமானாலும் சாமி வேடத்தில் நடிக்கலாம் என்று தொடர்ந்து சரச்சைக்குரிய வகையில் பேசினார். அவரது இந்தப் பேச்சு கடும் விமர்சனத்துக்குள்ளானது. பொதுவெளியில் அவருக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்தன. 

இந்தநிலையில், ராதாரவி மீது நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோருக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் ட்வீட் மூலம் வலியுறுத்தியிருந்தார். இதனையடுத்து நடிகர் ராதாரவி தி.மு.க- விலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``நடிகர் ராதாரவி கழகக் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டுவருவதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அவர் தற்காலிகமாக தி.மு.க விலிருந்து நீக்கிவைக்கப்படுகிறார்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். 

ஸ்டாலின் ட்வீட்

ராதாரவியின் பேச்சுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின், ``பெண்ணுரிமை முன்னிறுத்தும் தி.மு.கவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவி அவர்களின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது. கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனப் பதிவிட்டுள்ளார்.