``தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு மக்கள் நீதி வழங்குவார்கள்” - மதுரையில் வைகோ காட்டம் | Vaiko campaign for Madurai candidate

வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (25/03/2019)

கடைசி தொடர்பு:09:35 (26/03/2019)

``தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு மக்கள் நீதி வழங்குவார்கள்” - மதுரையில் வைகோ காட்டம்

'தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு மக்கள் கண்டிப்பாக நீதி வழங்குவார்கள்' என மதுரையில் வைகோ காட்டமாகத் தெரிவித்தனர்

வைகோ

மதுரை தி.மு.க ஆதரவு வேட்பாளரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளருமான எழுத்தாளர் சு.வெங்கக்சனுக்கு அரிவாள் சுத்தியல் சின்னத்தில் வாக்கு கேட்டு பிரசார பொதுக்கூட்டம், மதுரை முனிச்சாலை பகுதியில் நடைபெற்றது. இதில், வைகோ தலைமைதாங்கி பேசினார். மேடையில் தி.மு.க, ம.தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். வைகோ மேடையில் பேசுகையில், "எழுத்தாளர் சு.வெங்கடேசன் சாகித்திய அகாடமி விருதினைப் பெற்று தமிழர்களுக்குப் பெருமைசேர்த்த வேட்பாளர். அவரது படைப்பான 'வேள்பாரி' பாராட்டுவதற்கு அளவில்லை. பாசிச கட்சிகளின் ஆட்சி மீண்டும் அமைந்தால், எதிர்கால சந்ததிகளுக்கு பேராபத்து. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு  பா.ஜ.க அரசு துணை நிற்கிறது. வளைகுடா நாடுகளில் எடுக்கப்படும் வளங்கள்போல நம் ஊர்களில் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட வளங்களைச் சுரண்ட கைகோக்கின்றனர்.

தேர்தல்

ஸ்டெர்லைட் படுகொலை, ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குச் சமமானது. கலெக்டர் ஆபீஸுக்கு மனு கொடுக்கச் சென்ற அப்பாவி மக்களை சுட்டுத்தள்ளினர். இதில், அவ்வழியே சென்ற நபர்களும் சுடப்பட்டனர். மாநிலத்தில் ஆளும் அ.தி.மு.க, குட்கா புகார், டெண்டர்களில் ஊழல் என்று  மக்களை ஏய்த்துவருகிறது. பி.ஜே.பி, நீட் தேர்வுகளைக் கொண்டுவந்தது. இட ஒதுக்கீட்டை நசிக்கியது.  பா.ஜ.க, அ.தி.மு.க, கூட்டணி மக்களை போட்டிபோட்டு கடுமையாக வஞ்சிக்கின்றன. இதற்கெல்லாம், வரும் ஏப்ரல் 18 -ம் தேதி  நீதிபதிகளான வாக்காளர்கள் தீர்ப்பு அளிப்பார்கள்” என்றார்.