`எப்போதும் இவர் தொடர்பு எல்லைக்கு வெளியேதான் இருப்பார்!'- கார்த்திக் சிதம்பரத்தைக் கிண்டலடித்த விஜயபாஸ்கர் | How are people going to meet people for bailing in crimes?

வெளியிடப்பட்ட நேரம்: 11:15 (25/03/2019)

கடைசி தொடர்பு:09:34 (26/03/2019)

`எப்போதும் இவர் தொடர்பு எல்லைக்கு வெளியேதான் இருப்பார்!'- கார்த்திக் சிதம்பரத்தைக் கிண்டலடித்த விஜயபாஸ்கர்

``சிவகங்கைத் தொகுதியில் போட்டியிடும் ஹெச்.ராஜாவை எதிர்த்து ஒரு கார்த்திக் சிதம்பரம் அல்ல, ஓராயிரம் கார்த்திக் சிதம்பரம் வந்தாலும் வீழ்த்த முடியாது'' என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

விஜயபாஸ்கர்

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில், அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க சார்பில், பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா போட்டியிடுகிறார். சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரின் அறிமுகக் கூட்டம் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஆலங்குடியில் நேற்று நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, 'முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் புத்திரன் கார்த்தி சிதம்பரத்தை எனக்குப் போட்டியாக அறிவித்துள்ளனர். ப.சிதம்பரம் குடும்பம் பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கி அவற்றிற்கெல்லாம் ஜாமீன் கிடைப்பதற்காக, அலைந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், அவர்கள் எப்படி மக்களைச் சந்திக்கப்போகிறார்கள்? குற்ற வழக்குகளில் சிக்கிய  அவர்களை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மத்திய அரசால் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டுவரும் நலத்திட்டங்கள் தொடர, மீண்டும் மோடி பிரதமராக வேண்டும்" என்றார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வேட்பாளரை அறிமுகப்படுத்தி வைத்துப் பேசுகையில், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப்போல ஹெச்.ராஜாவுக்கும் ஹிந்தி உட்பட  7 மொழிகள் தெரியும்.  குறிப்பாக, மோடிக்கு மிகவும் நெருக்கமானவராக இருப்பதால், மக்கள் பிரச்னைகளை டெல்லி வரை உடனடியாகக் கொண்டுசெல்ல முடிகிறது. சிவகங்கைத் தொகுதியில் ஹெச்.ராஜாவை எதிர்த்து ஒரு கார்த்திக் சிதம்பரம் அல்ல, ஓராயிரம் கார்த்திக் சிதம்பரம் வந்தாலும் வீழ்த்த முடியாது. கார்த்திக் சிதம்பரம் எப்போதும் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருப்பவர்" என்றார்.