`என்னிடம் கேட்காதீங்க, வைகோ-விடம் கேளுங்க!'‍-`உதயசூரியன்' குறித்த கேள்விக்கு கணேசமூர்த்தி பதில் | mdmk ganesamoorthy says, ask vaiko regarding symbol decision

வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (25/03/2019)

கடைசி தொடர்பு:09:37 (26/03/2019)

`என்னிடம் கேட்காதீங்க, வைகோ-விடம் கேளுங்க!'‍-`உதயசூரியன்' குறித்த கேள்விக்கு கணேசமூர்த்தி பதில்

ஸ்டாலினுடன் வைகோ

தி.மு.க கூட்டணியில், ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க பொருளாளர் கணேசமூர்த்தி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக வெளியாகியிருக்கும் தகவல்களில் பெரும் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க கூட்டணியில் ஒரு எம்.பி சீட்டைப் பெற்றிருக்கும் ம.தி.மு.க, ஈரோடு தொகுதியில் போட்டியிடுகிறது. ம.தி.மு.க பொருளாளரான கணேசமூர்த்தி, ஈரோடு தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, பிரசாரம் செய்துவருகிறார். ‘பம்பரம் சின்னம் கிடைக்காததால், தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சுயேச்சை சின்னத்தில்தான் கணேசமூர்த்தி போட்டியிடுவார்’ என வைகோ சொல்லிவந்தார். ஆனால், நேற்றிலிருந்து கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியில் பிரசாரத்தில் இருந்த கணேசமூர்த்தியும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இருப்பதாகக் கூறினார்.

கணேசமூர்த்தி, சுயேச்சை சின்னத்தில்தான் போட்டியிடுவார் என வைகோ தீர்க்கமாகச் சொல்லியிருந்த நிலையில், ‘நான் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இருக்கிறேன்’ என கணேசமூர்த்தி சொல்லியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கணேசமூர்த்தி

இதுசம்பந்தமாக, நேற்றிரவு ஈரோடு ம.தி.மு.க அலுவலகத்தில் அவசர பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றை ம.தி.மு.க பொருளாளர் கணேசமூர்த்தி ஏற்பாடுசெய்திருந்தார். “ஈரோடு மக்களவைத் தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் நான் போட்டியிடுகிறேன். தி.மு.க தலைவர் ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஈரோட்டிற்கு பிரசாரம் செய்ய வரவிருக்கின்றனர். நான் ஏற்கெனவே பழனி மற்றும் ஈரோடு தொகுதியில் எம்.பி-யாக இருந்திருக்கிறேன். நான் பதவியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மக்கள் பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து என்னுடைய பங்களிப்புகளை அளித்துவருகிறேன்” என்று கூறினார்.

`நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இருக்கிறீர்கள் என வைகோ ஏன் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை?’ என நாம் கணேசமூர்த்தியிடம் கேள்விகளை முன் வைத்தோம்.

இதற்குப் பதில் அளிக்காமல் பதறிய கணேசமூர்த்தி, ‘நாங்கள் உதயசூரியன் சின்னத்தில் நிற்பதில் ஒருசில சட்ட சிக்கல்கள் இருக்கின்றன. அது முடியும் வரை சொல்ல வேண்டாம் என நினைத்தோம். பொதுவெளியில் அந்தத் தகவல் வெளிப்பட்ட காரணத்தால், சொல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது” என்றவரிடம், ‘உதயசூரியன் சின்னத்தில் நிற்பதில் வைகோ-விற்கு உடன்பாடு இல்லையா, ‘உதயசூரியன் சின்னத்தில் நிற்கச் சொல்லி தி.மு.க நிர்பந்தப்படுத்தியதா’ எனத் தொடர்ந்து கேள்வி கேட்டபோது, “சின்னம் பற்றிப் பேசுவதில் ஒருசில சட்ட சிக்கல்கள் இருக்கின்றன. இந்தக் கேள்விகளை எல்லாம் வைகோவிடம் போய் கேளுங்கள். என்னிடம் எதுவும் கேட்காதீர்கள். இந்தப் பிரச்னைகளுக்காகத்தான் நான் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதே இல்லை” எனப் பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துக்கொண்டார்.

ம.தி.மு.க வேட்பாளரான கணேசமூர்த்தி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதில் ஏதோ கட்சிக்குள் கடுமையான பூசல் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. பூனைக்குட்டி வெளியே வராமலா போய்விடப்போகிறது!