`வசந்தகுமாரின் வெற்றியைப் பாதிக்குமே!'- தி.மு.க-வின் கோஷ்டி மோதல். அதிருப்தியில் குமரி காங்கிரஸ் | kumari congress where upset regarding the fight in between DMK members

வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (25/03/2019)

கடைசி தொடர்பு:09:38 (26/03/2019)

`வசந்தகுமாரின் வெற்றியைப் பாதிக்குமே!'- தி.மு.க-வின் கோஷ்டி மோதல். அதிருப்தியில் குமரி காங்கிரஸ்

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க-வில் கடும் கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. தி.மு.க ஒன்றியப் பொறுப்பாளர் மற்றும் அணி நிர்வாகிகள்மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இது, தேர்தல் பணியைப் பாதிக்கும் என காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.

மனோ தங்கராஜ் - புஷ்பலீலா ஆல்பன்

கன்னியாகுமரி மாவட்ட மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளராக இருப்பவர் மனோ தங்கராஜ். இவரது தலைமையில், கடந்த 23-ம் தேதி அழகிய மண்டபத்தில் தி.மு.க தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட துணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான புஷ்பலீலா மற்றும் அவரது மகனும் மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளருமான பிஸ்வஜித் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது, தன்னை ஏன் தேர்தல் பணிக்குழுவில் சேர்க்கவில்லை என பிஸ்வஜித் கேட்டுள்ளார். இதனால், மனோ தங்கராஜ் டென்ஷனாகி சத்தம் போட்டதாகத் தெரிகிறது. மேலும், திருவட்டாறு ஒன்றியப் பொறுப்பாளர் ஜாண்பிரைட், மாவட்ட தொழில்நுட்ப அணி அமைப்பாளர் வில்சன் மற்றும் ஜெரோம் உள்ளிட்டோர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பிஸ்வஜித், திருவட்டாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். 

இந்த நிலையில், புஷ்பலீலா ஆல்பன் மற்றும் அவரது மகன் பிஸ்வஜித் ஆகியோர் தன்னைத் தாக்கியதாக மனோ தங்கராஜ் தரப்பைச் சேர்ந்த ஜெரோம், திருவட்டாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், ஜெரோம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தார். இந்த மனுக்கள்குறித்து விசாரணை நடத்திய திருவட்டாறு போலீஸார், மருத்துவ அணி அமைப்பாளர் பிஸ்வஜித் கொடுத்த புகாரின் பேரில் ஜாண்பிரைட், வில்சன், ஜெரோம் ஆகியோர்மீது வழக்குப்பதிவு செய்யதனர். ஜெரோம் கொடுத்த புகாரின் அடிப்படையில், முன்னாள் எம்.எல்.ஏ புஷ்பலீலா ஆல்பன் மற்றும் பிஸ்வஜித் ஆகியோர்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தி.மு.க உள்கட்சி மோதலில், நிர்வாகிகள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகன் பிஸ்வஜிக்குடன் புஷ்பலீலா

இதுகுறித்து முன்னாள் எம்.எல்.ஏ புஷ்பலீலா ஆல்பன் கூறுகையில், "மனோ தங்கராஜ் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளைத் தாக்கிவருகிறார். நகர செயலாளர் மணி, மாவட்ட துணைச் செயலாளர் கிறிஸ்டோபர் என மனோ தங்கராஜால் பாதிக்கப்பட்டவர்கள் அண்ணா அறிவாலயத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகார்களை விசாரித்துவிட்டு, மனோ தங்கராஜை எச்சரித்து அனுப்பினர். இப்போது, எனது மகன் தாக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கட்சித் தலைமைக்கு புகார் அனுப்பியுள்ளேன். வழக்கம்போல எச்சரித்து அனுப்பாமல், அவரைப் பதவி நீக்கம்செய்து, அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்லும் புதிய செயலாளரை நியமிக்க வேண்டும்" என்றார்.

இதுகுறித்து மனோ தங்கராஜ் கூறும்போது, "புஷ்பலீலா ஆல்பன் தேர்தல் பணிக்குழுவில் உள்ளார். அவரது மகனையும் தேர்தல் பணிக்குழுவில் சேர்க்க வேண்டும் என கேட்கிறார். ஒரே வீட்டில் இரண்டுபேருக்கு தேர்தல் பணிக்குழுவில் பொறுப்பு தரமுடியாது என நான் கூறினேன். மேலும், ஆற்றூர் பஞ்சாயத்து செயலாளர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், அவரது பதவியை தனக்குத் தரவேண்டும் என பிஸ்வஜித் என்னிடம் கேட்டார். நான் அதற்கு மறுப்பு தெரிவித்ததால், வேண்டும் என்றே பிரச்னை செய்கிறார்கள்" என்றார்.

நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் கூட்டணிக் கட்சியான தி.மு.க-வில் உள்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளதால், காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரின் தேர்தல் பணிகள் பாதிக்கும் என காங்கிரஸ் கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளார்