`சயான் தொடர்பான வீடியோவைப் பார்க்கல, பார்த்த பின் நடவடிக்கை!'- வழக்கறிஞர் பேட்டி | Video released related to Kodanad Murder case

வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (25/03/2019)

கடைசி தொடர்பு:12:00 (25/03/2019)

`சயான் தொடர்பான வீடியோவைப் பார்க்கல, பார்த்த பின் நடவடிக்கை!'- வழக்கறிஞர் பேட்டி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்குச் சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ம்  ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி 11 பேர் கொண்ட கும்பல் நள்ளிரவில் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது. அப்போது கொள்ளைச் சம்பவத்தைத் தடுக்க முயன்ற ஓம் பகதூர் என்ற காவலாளியைக் கொலை செய்தது அந்தக் கும்பல். அப்போது நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த முரளி ரம்பா தனிப்படை அமைத்து சில தினங்களில் கொலை கொள்ளை வழக்கில் ஈடுபட்டதாக கனகராஜ் ,வளையார் மனோஜ், சயான், பிஜின் குட்டி, உதயகுமார், மனோஜ், சதீசன், சந்தோஸ் சாமி, திபு, ஜிதின் ஜாய், ஜம்ஷீர் அலி ஆகிய 11 பேரை கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின் அனைவரும் ஜாமீனில் வெளிவந்தனர்.

கொடநாடு விவகாரத்தில் சிக்கிய சயான்

முக்கிய நபர்களில் ஒருவனாகக் கருதப்பட்ட கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். பின் வழக்கு விசாரணையை ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முக்கிய நபர்களாக கருதப்படும் சயான், வாளையார் மனோஜ் ஆகியோரும் டெல்லியில் பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுடன் இணைந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அதில் கொலை கொள்ளைச் சம்பவத்துக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதல்வர் மீது கொலைப்பழி சுமத்தியதாக சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகிய இருவரது ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்டு அவர்களைக் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். வழக்கு விசாரணைக்குக் கோவையிலிருந்து ஊட்டிக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்கள் முதல்வரைத் தொடர்புபடுத்தி பேட்டியளித்ததைத் தொடர்ந்து சிறையில் இவர்கள் இருவரையும் தனிமை சிறையில் வைத்துக் கொடுமைப்படுத்துவதாக நீதிபதியிடம் சயான் தரப்பு வழக்கறிஞர் நீதிபதியிடம் தெரிவித்தார்.

மனோஜ்- சயான்

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் சயான் யாரிடமும் பேசாதவாறு போலீஸார் பார்த்துக்கொண்டனர். சிறையில் மற்ற கைதிகளுடன் கூடப் பேசக்கூடாது மற்றும் வழக்கு விசாரணைக்குக் கூட சிறையில் உள்ள மற்ற நான்கு கைதிகளுடன் அழைத்துவராமல் தனி வாகனத்தில் சயானை அழைத்து வந்தனர். இதனால் சிறைக்குள்ளும் சிறைக்கு உள்ளும் சயானுக்கு பாதுகாப்பு இல்லை என வழக்கறிஞர் ஆனந்தன் தெரிவித்தார். ஆனால், சயான் ஜாமீன் மனு விசாரணைக்கு வரும் முன்பே இரண்டு தினங்களுக்கு முன்பு சயான் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

அரசியல் பின்னணி காரணமாகவே கொடநாடு கொலை வழக்கு நடைபெற்றது எனப் பலரும் கருதுகின்றனர். இந்நிலையில் இன்று கொடநாடு கொலை வழக்கில் திட்டமிட்டே சிக்கவைக்கப்பட்டாரா எடப்பாடி பழனிசாமி என்ற பெயரில் வீடியோ ஒன்று வெளியாகி  பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கொடநாடு கொலை வழக்கில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் வீடியோ ஆடியோ என வெளியாகி வழக்கில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. கொடநாடு பங்களா போன்றே கொடநாடு வழக்கும் மர்மம் நிறைந்ததாகவே உள்ளது.

சயானின் வழக்கறிஞர்  ஆனந்தன்

இது குறித்து சயான் தரப்பு வழக்கறிஞர் ஆனந்தனிடம் கேட்டப்போது, ``சயானுக்குச் சிறையில் பாதுகாப்பு இல்லை எனப் பலமுறை நீதிபதியிடம் முறையிட்டேன். அரசியல் காரணங்களுக்காக தேர்தல் முடியும் வரை சயான் வாய் திறக்கக்கூடாது என்பதில் போலீஸார் கவனமாக உள்ளனர். தற்போது குண்டர் சட்டம் பாய்ந்ததில்கூட உள்நோக்கம் உள்ளது. மேலும் சயானை தனிமைச் சிறையில் அடைத்து உளவியல் ரீதியில் துன்புறுத்துவதாக என்னிடம் தெரிவித்தார். என்னைச் சுற்றி நடக்கிற சம்பவங்களைப் பார்த்தால் பயமாக உள்ளது என்றார். சயானின் ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பே குண்டர் சட்டம் பாய்ந்தது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. மேலிட அழுத்தம் காரணமாக தொடர்ந்து சயான் பலிகடா ஆக்கப்படுகிறார். நேற்று சயான் தொடர்பான வீடியோ வெளியாகியது. அதை இன்னும் பார்க்கவில்லை. வீடியோவைப் பார்த்த பின் மேல் நடவடிக்கை குறித்து முடிவு எடுப்போம்" என்றார்.