`தேர்தல் நாடகமாடி, எங்க பணத்தை தீபா சுருட்டிட்டாங்க!'- விருப்ப மனு அளித்த நிர்வாகிகள் புலம்பல் | deepa peravai cadres accuse deepa for loot their money

வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (25/03/2019)

கடைசி தொடர்பு:09:39 (26/03/2019)

`தேர்தல் நாடகமாடி, எங்க பணத்தை தீபா சுருட்டிட்டாங்க!'- விருப்ப மனு அளித்த நிர்வாகிகள் புலம்பல்

எதிர்வரும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக, எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளர் ஜெ.தீபா அறிவித்துள்ளார். பிரசாரத்தில் ஈடுபடுமாறு அ.தி.மு.க தலைவர்கள் கேட்டுக்கொண்டால், தான் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார். ஜெ.தீபாவின் ஆதரவால், அ.தி.மு.க கூட்டணி பலம் அடைந்துள்ளது ஒருபுறமிருக்க, தனித்துப் போட்டி என முன்பு அறிவித்து, விருப்பமனுவிற்காக வாங்கிய தொகையை தீபா சுருட்டிவிட்டதாகப் பேரவை நிர்வாகிகள் புலம்புகின்றனர்.

தீபா

இதுகுறித்து நம்மிடம் பேசிய தென்மாவட்ட பேரவைச் செயலாளர் ஒருவர், "தனித்துப் போட்டியிடப்போவதாக தீபா அறிவித்ததால், பேரவையிலுள்ள நிர்வாகிகளும் தொண்டர்களும், கடந்த மார்ச் 16, 17-ம் தேதிகளில் தி.நகரிலுள்ள பேரவையின் தலைமையகத்தில் விருப்பமனு அளித்தோம். ஆண்களுக்கு 5,000 ரூபாய், பெண்களுக்கு 2,000 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்பட்டது. மொத்தம் 160 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், திடீரென தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக தீபா அறிவித்தார். 

அ.தி.மு.க தொண்டர்கள் வருத்தப்படுவார்கள் என்பதால், தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனக் காரணம் கூறினார். பிறகு எதற்காக விருப்பமனு வாங்கினார் என்பது இதுவரை எங்களுக்குக் காரணம் புரியவில்லை. இந்நிலையில், எங்களிடம் வாங்கிய விருப்பமனு கட்டணம் ஏறத்தாழ 7 லட்சம் ரூபாயைத் திருப்பி அளிக்கவில்லை. பணத்தை திருப்பிக் கேட்டால், 'பொறுங்கள். உரிய நேரத்துல பணம் வந்து சேரும்' என்கிறார்கள். தேர்தல் நாடகமாடி, தீபா எங்கள் பணத்தை சுருட்டிவிட்டதாகத் தெரிகிறது'' என்றவரிடம், ''போலீஸில் புகார் அளிக்க வேண்டியதுதானே" என்றோம். 

''அது எப்படிங்க, என்ன இருந்தாலும் அம்மாவோட ரத்தம். அவங்க மேலேயே போலீஸ்ல புகார் அளிப்பது சரியாக இருக்காது. எங்க கைக் காசைப் போட்டுதான், ஒவ்வொரு மாவட்டத்துலயும் இந்தப் பேரவையை நடத்துறோம். இதுல நாங்க சம்பாதிக்குறதுக்கு எதுவுமில்லை. விருப்பமனு 5,000 ரூபாய்தான் என்றாலும், இதற்காக ஊரிலிருந்து வந்த போக்குவரத்து செலவு, தங்குமிடம் என மொத்தம் 10 ஆயிரம் காலியாகிவிட்டது. எங்கள் கஷ்டத்தைப் புரிந்துகொண்டு, தீபாவே பணத்தை திருப்பி அளித்தால் சரி'' என்று முடித்துக்கொண்டார். 

தீபா தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், "விரைவில் அவர்களுக்கு பணம் திருப்பி அளிக்கப்படும்'' என்கிற உறுதிமொழியோடு பேச்சை பண்ணினர்.

தன்னை ஜெயலலிதாவின் மறு உருவமாகவே பார்க்கும் ஒரு கூட்டம், இன்னமும் தமிழ்நாட்டில் இருக்கிறது என்பது தீபாவுக்கு நன்றாகத் தெரியும். அவர்களை கைதூக்கிவிடாவிட்டாலும் பரவாயில்லை, அவர்களை வைத்து வியாபாரம் செய்யாமல் இருந்தால் சரி.