‘ஊசி போட்டதுல ஏதோ தப்பு நடந்துருக்கு!’- மூளைச்சாவு அடைந்த பெண்ணின் குடும்பத்தினர் புகார் | 46 years old lady get brain death of wrong medical treatment...

வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (25/03/2019)

கடைசி தொடர்பு:13:05 (25/03/2019)

‘ஊசி போட்டதுல ஏதோ தப்பு நடந்துருக்கு!’- மூளைச்சாவு அடைந்த பெண்ணின் குடும்பத்தினர் புகார்

மூளைச்சாவு

ஈரோட்டில், கர்ப்பப்பை அறுவைசிகிச்சை செய்த பெண்ணுக்கு, தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால், மூளைச்சாவு அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா தேவபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆறுமுகம் – ஞானசகுந்தலா தம்பதி. இவர்கள், பவானியில் தினசரி காய்கறி மார்க்கெட்டில் காய்கறிக் கடை போட்டு வியாபாரம் செய்துவருகின்றனர். நன்றாக இருந்த ஞானசகுந்தலாவிற்கு, கடந்த மாதம் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டிருக்கிறது. அதற்காக, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு எதிரேயுள்ள தனியார் மருத்துவமனையில், ஞானசகுந்தலா அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கர்ப்பப்பையில் கோளாறு ஏற்பட்டிருப்பதாகக் கூறி, கடந்த பிப்ரவரி 15-ம் தேதி அறுவைசிகிச்சை செய்து வீட்டுக்கு அனுப்பியிருக்கின்றனர்.

வீடு திரும்பிய நாளிலிருந்து ஞானசகுந்தலாவுக்கு தினமும் கடுமையான தலைவலி ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து தலைவலி ஏற்பட்டதால், அறுவைசிகிச்சை செய்த அதே மருத்துவமனைக்கு மறுபடியும் சிகிச்சைக்காக வந்திருக்கின்றனர்.  ‘வெயில் காரணமாகத் தலைவலி ஏற்பட்டிருக்கலாம்’ என டாக்டர்கள் அலட்சியமாகக் கூறி, மாத்திரைகளைக் கொடுத்து அனுப்பியிருக்கின்றனர். அதன்பின்னரும் ஞானசகுந்தலா கடுமையான தலைவலியால் அவதிப்பட்டிருக்கிறார்.

மூளைச்சாவு

அதையடுத்து, நேற்று முன்தினம் இரவு மறுபடியும் அதே மருத்துவமனையில் ஞானசகுந்தலா அட்மிட் செய்யப்பட்டிருக்கிறார். காலை 8.30 மணியளவில் மருத்துவர்கள் ஞானசகுந்தலாவிற்கு இரண்டு ஊசிகள் போட்டதாகச் சொல்லப்படுகிறது. ஊசியைச் செலுத்திய சில மணி நேரத்திலேயே, ஞானசகுந்தலா சுயநினைவை இழந்திருக்கிறார். இதைப்பார்த்து பதறிப்போன மருத்துவர் அய்யாவு என்பவர், அருகிலிருந்த கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கு ஞானசகுந்தலாவை அழைத்துச்சென்று சிகிச்சை கொடுத்திருக்கிறார். இருந்தும் சிகிச்சை பலனின்றி மதியம் ஒரு மணியளவில் ஞானசகுந்தலா மூளைச்சாவு அடைந்திருக்கிறார்.

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட உடனேயே, ஞானசகுந்தலாவின் குடும்பத்தினர் கொதித்துப்போனார்கள். அவர்களைச் சமாதானப்படுத்த முயன்ற மருத்துவர்கள், ‘உடலுறுப்புகளைத் தானம் செய்யுங்கள். வேறு யாருக்காவது பயன்படட்டும்’ என விஷயத்தை வேறுபக்கம் திருப்பியிருக்கின்றனர். ஞானசகுந்தலாவின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, ‘நம்முடைய மருத்துவமனைக்கு வாருங்கள். பேசி தீர்த்துக்கொள்ளலாம்’ எனச் சொல்லிவிட்டு சிகிச்சையளித்த அய்யாவு கிளம்பியிருக்கிறார். மருத்துவமனைக்குச் சென்றபோதுதான் டாக்டர் அய்யாவு தப்பித்துச்சென்றது தெரியவந்திருக்கிறது. இது தெரிந்து கோபமடைந்த ஞானசகுந்தலாவின் உறவினர்கள், அந்த மருத்துவமனையை அடித்து நொறுக்கினர்.  

மூளைச்சாவு

மேலும், ‘அறுவைசிகிச்சைக்குப் பின்புதான் ஞானசகுந்தலாவிற்கு கடுமையான தலைவலி ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் ஏதோ தவறு நடந்திருக்கிறது. டாக்டர்கள் செலுத்திய அந்த இரண்டு ஊசியால்தான் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. ஞானசகுந்தலா எப்படி மூளைச்சாவு அடைந்தார் என்பது எங்களுக்குத் தெரிய வேண்டும்.  மேலும், சிகிச்சையளித்த டாக்டர் அய்யாவு எங்கள் முன் வர வேண்டும்’ என ஈரோடு ஈ.வி.என் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த டவுன் டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார், ‘சம்பந்தப்பட்ட மருத்துவமனை மற்றும் மருத்துவர்மீது புகார் கொடுங்கள். நிச்சயமாக நடவடிக்கை எடுக்கிறோம்’ எனச் சொன்னபின்னரே நிலைமை சீரானது. இதுசம்பந்தமாக ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்திவருகின்றனர்.

கர்ப்பப்பை கோளாறினால் அறுவைசிகிச்சை செய்தவருக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை, மூளைச்சாவில் முடிந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.