`முக்கியத் தகவல், உங்களைச் சந்திக்கணும்!' - மகளுக்காக வாலிபரைக் கடத்திய தாய்   | youth kidnapped by lover's mother in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 12:51 (25/03/2019)

கடைசி தொடர்பு:12:51 (25/03/2019)

`முக்கியத் தகவல், உங்களைச் சந்திக்கணும்!' - மகளுக்காக வாலிபரைக் கடத்திய தாய்  

மகளுக்காக கடத்தலில் ஈடுபட்ட தாய்

சென்னைத் திருவொற்றியூரைச் சேர்ந்த இளம்பெண்ணைக் காதலித்த வாலிபர் திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் அந்தப் பெண்ணின் தாய் உட்பட உறவினர்கள் வாலிபரை நைசமாகப் பேசி கடத்தினர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் தாலுகா கண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் (27), இவர், தாம்பரத்தில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அதே கம்பெனியில், திருவொற்றியூர் கார்கில் நகர் பகுதியைச் சேர்ந்த திவ்யா (23)  என்பவரும் வேலை பார்த்து வருகிறார். ஒரே கம்பெனியில் வேலை பார்த்ததால் இவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது. கடந்த ஓராண்டாக இருவரும் காதலித்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி கிருஷ்ணராஜிடம், திவ்யா வற்புறுத்தியுள்ளார். ஆனால், திவ்யாவை அவர் திருமணம் செய்யவில்லை. இதனால், திவ்யா தனது உறவினர்களிடம் விவரத்தைக் கூறியுள்ளார். இதையடுத்து கிருஷ்ணராஜை கடத்த திவ்யாவின் உறவினர்கள் திட்டமிட்டனர். கிருஷ்ணராஜிடம் திவ்யா செல்போனில் பேசினார். உங்களைச் சந்தித்து முக்கியமான தகவல் ஒன்றைச் சொல்ல வேண்டும். உடனடியாக வடிவுமையம்மன் கோயிலுக்கு வாருங்கள் என்று திவ்யா கூறியுள்ளார். அதன்படி கிருஷ்ணராஜிம் அங்கு வந்துள்ளார். அப்போது கோயிலில் காத்திருந்த திவ்யாவின் உறவினர்கள் கிருஷ்ணராஜைக் கடத்தினர்.

திவ்யாவின் தாய் கவிதாவின் உறவினர்

இது தொடர்பாக கிருஷ்ணராஜின் உறவினர்கள் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கிருஷ்ணராஜைத் தேடினர். அப்போது கிருஷ்ணராஜை திவ்யாவின் உறவினர்கள் கடத்தி வைத்திருந்த இடம் குறித்து போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்குச் சென்ற இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் தலைமையிலான போலீஸார் கிருஷ்ணராஜை மீட்டனர். அவரைக் கடத்திய வழக்கில் திருவொற்றியூர், காந்தி தெருவைச் சேர்ந்த திவ்யாவின் அம்மா கவிதா (38), அதே பகுதியைச் சேர்ந்த அவரின் உறவினர்கள் முருகேசன் சங்கர் குமார் (28), இந்திரா காந்தி நகர் நாராயணன் மகன் அரிகிருஷ்ணன் (25) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கிருஷ்ணராஜ், காணவில்லை என்று அவரின் உறவினர்கள் புகார் கொடுத்தனர். அதன்பேரில் அவரை நாங்கள் தேடினோம். அப்போது அவரின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை ஆய்வு செய்தோம். அதில் திவ்யா பேசியது தெரியவந்தது. உடனடியாக திவ்யா மற்றும் அவரின் உறவினர்களிடம் விசாரணை நடத்த அவர்களை தொடர்பு கொண்டபோது அனைவரின் செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தன. இதனால் செல்போன் சிக்னலை வைத்து கிருஷ்ணராஜை கடத்தி வைத்திருந்த இடத்தைக் கண்டறிந்தோம்.

திவ்யாவின் தாய் கவிதாவின் உறவினர்

பிறகு அவரை மீட்டு என்ன நடந்தது என்று கிருஷ்ணராஜிடம் விசாரித்தோம். அப்போது அவர் முழுவிவரத்தை எங்களிடம் கூறினார். அதன்பிறகுதான் காதல் விவகாரம் எங்களுக்குத் தெரியவந்தது. கிருஷ்ணராஜ் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் திவ்யாவின் உறவினர்களை கைது செய்துள்ளோம். திவ்யாவின் அம்மாவிடம் விசாரித்தபோது,`கிருஷ்ணராஜ், என் மகளைக் காதலித்துவிட்டு ஏமாற்றிவிட்டார். அவரிடம் அதுதொடர்பாக பேசி முடிவெடுக்கத்தான் அழைத்துச் சென்றோம்' என்று கூறினார். இருப்பினும் கிருஷ்ணராஜை அவர்கள் திட்டமிட்டுக் கடத்தியது எங்களின் விசாரணையில் தெரியவந்தது. இதனால் அவர்களை கைது செய்துள்ளோம். இந்தக் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். கிருஷ்ணராஜ் மீது திவ்யா புகார் கொடுத்தால் விசாரணைக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர். 

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``திவ்யாவின் போனிலிருந்து கிருஷ்ணராஜிக்கு அழைப்பு வந்ததும் அவர் சுதாரித்துள்ளார். இதனால் வழக்கறிஞர் ஒருவருடன்தான் வடிவுடையம்மன் கோயிலுக்குச் சென்றுள்ளார். இருப்பினும் திவ்யாவின் உறவினர்கள் கிருஷ்ணராஜை காரில் கடத்தியுள்ளனர். இதனால் கிருஷ்ணராஜின் வழக்கறிஞர் உடனடியாக எங்களுக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து கிருஷ்ணராஜை மீட்டோம்" என்றார்.