`நடிகைகளுக்காக வழக்குப் போட்டு ஜெயிச்சுக் கொடுத்தேனே!'- நயன்தாரா விவகாரத்தில் ராதாரவி விளக்கம் | Actor Radha Ravi explains his position on his recent controversial remarks on Nayanthara

வெளியிடப்பட்ட நேரம்: 13:08 (25/03/2019)

கடைசி தொடர்பு:13:08 (25/03/2019)

`நடிகைகளுக்காக வழக்குப் போட்டு ஜெயிச்சுக் கொடுத்தேனே!'- நயன்தாரா விவகாரத்தில் ராதாரவி விளக்கம்

'கொலையுதிர் காலம்'  படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், நடிகை நயன்தாராவைப் பற்றிய நடிகர் ராதாரவி விமர்சனமும், அதைத் தொடர்ந்து  ராதாரவியைப் பற்றிய பல்வேறு பிரபலங்களின் விமர்சனங்களும்தான் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டுவருகின்றன. இந்த நிலையில், தி.மு.கழகமும்  'நடிகர் ராதாரவியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிமாக நீக்குவதாக' செய்தி வெளியிட்டது. நடிகர் ராதாரவியிடமே  இதுபற்றி பேசினோம்.

நயன்தாரா

''தி.மு.க-வில் இருந்து நீக்கிட்டதா சொன்னாங்க. நீங்க என்ன நீக்குறது, நானே விலகிக்கிறேன்னு சொல்லிட்டேன். இதுக்கெல்லாம் நான் வருத்தப்பட மாட்டேன்.  ஏன்னா, அரசியலில் இதெல்லாம் சகஜம். ஆனா, கட்சி எனக்கு ஒரு ஷோ காஸ்ட் நோட்டீஸ் அனுப்பி, 'உன் மேல இந்தத் தப்பு இருக்கு. உன்னை ஏன் கட்சியோட அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கக்கூடாது'ன்னு கேட்டிருக்கலாம். அது மட்டும்தான் மனசுக்கு வருத்தமா இருக்கு'' என்றவர், நயன்தாரா பற்றிய தன்னுடைய விமர்சனம் குறித்தும் பேசினார்.  

ராதாரவி''கே.ஆர். விஜயாம்மா சாமி வேஷம் போடும்போது, அப்படியே அம்மன் மாதிரியே ஆயிடுவாங்க. அந்த மாதிரி, நயன்தாராவும்  தெலுங்குல சீதா ரோல் பண்றாங்க; இங்கே வேற வேற ரோல் எல்லாம் பண்றாங்க. என்ன ரோல் பண்ணாலும் அவங்க சக்ஸஸ் பண்றாங்க. இதை நாம பாராட்டணும் அப்படிங்கிற அர்த்தத்துலதான் நான் பேசினேன். ஒருத்தர், நயன்தாராவை எம்.ஜி.ஆர்., ரஜினிகாந்த் லெவலுக்கு  உயர்த்திப் பேசினாரு. நான் அதை  அங்கேயே கண்டிச்சேன். ஏன்னா, அவங்க ரெண்டு பேரும் சினிமாவுல லெஜண்ட்ஸ். நயன்தாரா உழைப்பால உயர்ந்த நடிகைங்கிறதை ஒத்துக்கிறேன். ஆனா, எம்.ஜி.ஆர்., ரஜினிகாந்த்தோட கம்பேர் செய்து பேசறதை என்னால ஏத்துக்க முடியாது'' என்றவர் தொடர்ந்தார். 

''சில வருஷங்களுக்கு முன்னாடி, சில கதாநாயகிகள் தப்பான தொழில் பண்றாங்கன்னு அவங்க படத்தோட நியூஸ் வந்துச்சு. அப்ப அவங்களுக்காக வழக்குப் போட்டு ஜெயிச்சுக் கொடுத்தேனே. நடிகைகள் பத்தி, ஒரு வாரப் பத்திரிகையில் ஒரு தொடர் வந்தப்போ, நான், ரேவதி, வாசுகி அம்மா மூணு பேரும் போய் ஃபைட் பண்ணி அந்தத் தொடரை நிறுத்தலையா? இதையெல்லாம் மறந்துட்டீங்க. கடைசியா ஒண்ணு சொல்றேன். நயன்தாராவைப் பத்தி நான் பேசினது அவங்களையும் அவங்களை கட்டிக்கப் போறவரையும் வருத்தப்பட வைச்சிருந்தா, அதுக்கு நான் மனவருத்தப்படறேன். இதுக்கு மேல, அவங்க காலிலா விழ முடியும்'' என்று தன் பேச்சை முடித்தார் நடிகர் ராதாரவி.