`இது ஒரு நல்ல தலைவர் செய்கிற காரியமா?'- சுதர்சன நாச்சியப்பனைச் சாடும் கே.எஸ்.அழகிரி | ks alagiri talks about sudharsana nachiyappan

வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (25/03/2019)

கடைசி தொடர்பு:09:39 (26/03/2019)

`இது ஒரு நல்ல தலைவர் செய்கிற காரியமா?'- சுதர்சன நாச்சியப்பனைச் சாடும் கே.எஸ்.அழகிரி

கார்த்தி சிதம்பரத்தை விமர்சித்த முன்னாள் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் குறித்து, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியுள்ளார்.

கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்கு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் நீடித்துவந்த சிக்கல் நீங்கி, கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், அவரது அறிவிப்புக்கு கட்சியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. கார்த்தி சிதம்பரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், ``இந்த முறை காங்கிரஸ் அவருக்கு ஒரு சீட் கொடுத்து வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது. தொகுதியின் வளர்ச்சிக்காகப் பாடுபடாமல், வெளிநாடுகளில் பல்வேறு இடங்களில் சொத்துகளைச் சேர்த்திருக்கிறார்கள் சிதம்பரம் குடும்பத்தினர்" எனப் பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இவரின் எதிர்ப்பால் காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 

சுதர்சன நாச்சியப்பன்

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``எங்கள் கட்சியில் நிறையத் தகுதி வாய்ந்த தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால், தொகுதிகள் 9 தான் உள்ளன. எனவே, 9 பேருக்குதான் சீட் கொடுக்கப்படும். சீட் கிடைக்காததால், மற்றவர்களுக்கு வருத்தம் வருவது இயல்புதான். என்னுடைய அனுபவத்தில் என்னை இரண்டு முறை வேட்பாளராக அறிவித்து, நானும் பிரசாரத்துக்கு சென்றிருக்கிறேன். ஆனால், இரண்டே நாள்களில் எனக்குப் பதிலாக வேறு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அப்போது, எனக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால், அதன்பிறகு நிலைமையைத் தேற்றி அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்துள்ளேன். 

கே எஸ் அழகிரி

சுதர்சன நாச்சியப்பனைப் பொறுத்தவரை அவர் மிகவும் தகுதியானவர். அமைச்சராக, எம்.பி-யாக இருந்துள்ளார். கட்சியின் முடிவை ஏற்றுக்கொள்வதுதான் சரி. தலைமை முடிவுக்கு மாறாகப் பேசுவது என்பது ஒரு நல்ல தலைவர் செய்கிற காரியம் கிடையாது. தலைமையின் முடிவை விமர்சிப்பது தவறு. வருத்தம் இருப்பது இயல்புதான். ஆனால், அதை வெளிப்படுத்திய விதம் தவறு. இதுதான் அவருக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது. சிவகங்கை தொகுதிக்கு இரண்டு பேருடைய விருப்ப மனுக்களும் வந்திருந்தன. கார்த்தி சிதம்பரத்துக்காக 8 விருப்ப மனுக்களும், சுதர்சன நாச்சியப்பனுக்காக ஒரு மனுவும் வந்திருந்தது. இதனைப் பரிசீலித்து, ராகுல் காந்திதான் முடிவெடுத்து கார்த்தி சிதம்பரத்தை வேட்பாளராக அறிவித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க